நீரில் மிதந்தபடியே புல்லைச் சாப்பிட்டுப் பால் கொடுக்கும் நெதர்லாந்துப் பசுக்கள்.

காலநிலை மாற்றங்களை மாசுபடுத்தித் துரிதமாக்கும் வாயுகளை வெளியேற்றுவதில் ஐரோப்பிய நாடுகளில் முன்னணியில் நிற்கும் நாடுகளிலொன்று நெதர்லாந்து ஆகும். அவர்களுடைய பண்ணை மிருகங்கள் வெளிவிடும் மீத்தேன் வாயுவே அதன் முக்கிய காரணம். நவீனமான விவசாய, பண்ணை முறைகள் மூலம் அமெரிக்காவுக்கு அடுத்ததாக உலகின் மிகபெரிய விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடு நெதர்லாந்து ஆகும்.

உலகில் மக்கள் மிகச் செறிவாக வாழும் நாடுகளில் முதன்மையான நாடுகளிலொன்றான நெதர்லாந்தின் நிலப்பரப்பில் மூன்றிலொரு பகுதி கடல் மட்டத்தைவிடத் தாழ்மையானது. மீத்தேன் வாயு வெளியேற்றத்தால் உண்டாகும் காலநிலை மாற்றம் அந்த நாட்டின் நீர்மட்டத்தை மேலும் உயர்த்தி மேலும் சில பகுதிகளை நீரால் மூழ்கவைக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது.

காலநிலை மாற்றங்களுக்குத் தடைக்கற்களைப் போடும் நடவடிக்கைகள் பலவற்றில் நெதர்லாந்து ஈடுபட்டு வருகிறது. அவைகளில் ஒன்றாக 2019 இல் கால்நடைப் பண்ணையொன்று நீரின்மீது மிதக்கும் மூன்று மாடிக் கண்ணாடிக் கட்டடமாக அமைக்கப்பட்டிருக்கிறது. பசுக்கள் மேல் மாடியில் வாழ்கின்றன. நடுப்பகுதியில் பசுப்பால் தயிர், பாலேடு, பாலாடைக்கட்டி போன்றவையாக மாற்றப்படுகிறது. பாலாடைக்கட்டிகளைத் தேக்கிவைக்கும் பகுதியாக கீழ்ப்பகுதி செயற்படுகிறது.

மிதக்கும் பண்ணை நீர்மட்ட நிலைமைக்கு ஏற்ப சுமார் இரண்டு மீற்றர் உயர வேறுபாடுகளைச் சந்திக்கிறது. பசுக்களுக்கு உணவாக அருகிலிருக்கும் கோல்ப் விளையாட்டு மைதானப் புல், கால்பந்தாட்ட அரங்கில் மீதமாகும் உணவு, பியர்களுக்காகப் பாவிக்கப்பட்ட தானியத்தின் எச்சங்கள் மற்றும் விவசாயப் பண்ணைகளில் பாவிப்புக்குதவாதவை போன்றவை கொடுக்கப்படுகின்றன. அதன் மூலம் உணவுத்தயாரிப்பின் மீதங்கள் குப்பையாகாமல் தடுக்கப்படுவதுடன், அவை ஏற்படுத்தும் நச்சு வாயுகளும் தவிர்க்கப்படுகின்றன.

பசுக்களின் சாணம் தோட்டத்துக்கான உரமாக்கப்படுகிறது. அதன் மூலம் மீத்தேன் வாயு வெளியீடு பாதிகாகக் குறைக்கப்படுகிறது. மூத்திரம் மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு அவைகளுக்குக் குடிக்கும் நீராக மாற்றப்படுகிறது. பண்ணையில் பொருத்தப்பட்டிருக்கும் சூரியத் தகடுகள் மூலம் பண்ணைக்குத் தேவையான மின்சாரம் பெறப்படுகிறது. கண்ணாடிக்கட்டடத்துக்குக்கிருந்து பசுக்கள் வெளியேற்றும் வாயுக்களும் சுத்திகரிக்கப்படுகின்றன.

பண்ணையில் தயாரிக்கப்படுபவை அருகிலிருக்கும் நகர வீதியோரங்களிலும், கடைகளிலும் விற்கப்படுகின்றன. அப்போக்குவரத்துக்காக மின்சாரக் கல வாகனங்களே பாவிக்கப்படுகின்றன. சாதாரணமாக அப்பாற்பொருட்கள் விற்கப்படும் விலையை விடச் சிறிது அதிக விலையில் விற்கப்பட்டாலும் அப்பொருட்களுக்கு நிறைய வரவேற்பு இருப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ரொட்டர்டாம் துறைமுகத்தையடுத்து அமைந்திருக்கும் Floatingfarm என்ற இப்பண்ணை இந்த வகையில் முதலாவதாகும். ஆரம்பித்த காலத்திலிருந்து முதல் தடவையாக அப்பண்ணை 2021 இல் இலாபம் தர ஆரம்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்