சிகரம் தொடுவாய்…
நெருப்பாக வாழ்பவனே மனிதன் என்று
நினைத்திடடா! வாழ்ந்திடடா! நெருப்பு ஒன்றே
இருளகற்றும் சக்தியடா!
எரியும் போதும்
எழுச்சியுடன் மேல்நோக்கி தோன்றும் சக்தி உருவமடா! பற்றிவிட்டால் பரவிச் செல்லும்!
உச்சாணிக் கொம்பினையும் சாம்பல் ஆக்கும்!
நெருப்பாக வாழ்ந்திடடா! செருப்பாய் வாழ்வோர்
நிலையகற்றி நிமிர்த்திடடா! நேர்மை கொண்டு!
வீடிழந்தோம்! நாடிழந்தோம்! உறவி ழந்தோம்!!
வேரிழந்தோம்! தடமிழந்தோம்! வாழ்வி ழந்தோம்!
பேடியென நாமாகி பேசு கின்ற
பேச்சிழந்தோம்! மூச்சிழந்தோம்! பெண்டு பிள்ளை
நாடியினில் துடிப்பிழந்தோம்! கொத்துக் கொத்தாய்
நாமெல்லாம் சிங்களனால் செத்த ழிந்தோம்!
கூடிநின்று வேடிக்கைப் பார்த்தி ருந்தார்
கோமானாய்த் தமிழ்நாட்டை ஆண்டோ ரன்று!
திரையிட்டே மறைத்தாலும் கதிரின் கீற்று
தெரியாமல் போகாது! அலையின் முன்னே
கரைகட்டித் தடுத்தாலும் பயந்து என்றும்
கடலுக்குள் அடங்காது! வேங்கை தன்னை
சிறைக்குள்ளே அடைத்தாலும் அதனின் சீற்றம்
சிறிதளவும் மாறாது! காற்று மோதி
கரையாது மாமலைதான்! தமிழர் எம்மை
கரைத்திடவே எண்ணாதீர்! கரைந்தே போவீர்!
பதுமையல்ல மானுடன்நீ, வாழ்ந்தே காட்டு!
படுகளத்தில் வீரன்நீ, வென்றே காட்டு!
முதுகெலும்பு உனக்குண்டு, நிமிர்ந்தே வாழு!
முயற்சிகளும் உனக்குண்டு, உயர்ந்தே காட்டு!
முதுமரமே நீயென்றே நிலைத்தே காட்டு!
முகடெனவே உயர்ந்தேதான் வானை எட்டு!
குதுகலமும் கொள்கின்ற வலிமை காட்டு!
குறிக்கோளும் கொண்டேதான் சிகரம் எட்டு!
பாவரசு. பாரதிசுகுமாரன்