இந்தோனேசியர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட அதீதமான குற்றங்களுக்காக நெதர்லாந்து மன்னிப்புக் கோரியது.
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் இந்தோனேசியாவைத் தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பி வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது அக்காலத்தில் அவர்களின் காலனிய எஜமானாக இருந்த நெதர்லாந்து. 1945 – 1949 காலகட்டத்தில் அந்த நாட்டு மக்களின் மீதான வெறியாட்டம் உச்சக் கட்டத்தை அடைந்தது. அவைகளுக்காக நெதர்லாந்தின் பிரதமர் மார்க் ருத்தே பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டிருக்கிறார். 2020 இல் இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்திருந்த நெதர்லாந்து அரசரும் அச்சமயத்தில் இந்தோனேசியர்களிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார்.
தனக்குக் கீழே கைப்பற்றி ஆண்ட நாடுகளில் தமது மூதாதையர்கள் நடத்திய கொடுங்கோலாட்சியைப் பற்றி ஆதாரங்களுடன் தெரிந்துகொண்டு தமது நாட்டின் வரலாற்றுத் தவறுகளை ஏற்றுக்கொள்ளும் நோக்குடன் 2017 இல் நெதர்லாந்து ஆராய்ச்சிகளை நடத்த ஆரம்பித்திருந்தது. நாலரை வருடங்களாக இந்தோனேசிய ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து நடத்தப்பட்ட அந்த ஆராய்ச்சி விபரங்களின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே இன்றைய நெதர்லாந்தின் சார்பில் அந்த மன்னிப்புத் தெரிவிக்கப்பட்டது.
“அந்த நடவடிக்கைகளின் கேவலங்களுக்காக வெட்கப்படுகிறேன். நெதர்லாந்து அரசின் சார்பாக இன்றைய இந்தோனேசிய மக்களிடம் வேதனையுடன் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று பிரதமர் வியாழனன்று குறிப்பிட்டார்.
அன்றைய நெதர்லாந்து அரசின் இராணுவம் சித்திரவதைகளைத் தனது ஆட்சி நடத்திய நாடுகளில் “எப்போதாவது” தான் நடத்தியது என்பது உண்மையல்ல என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது வெளியிடப்பட்ட ஆராய்ச்சி.
“டச்சு சமூகம், அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லோருமே இராணுவத்தால் நடாத்தப்பட்ட அராஜகத்தைக் கண்டும் காணாமலிருந்தனர். அது மட்டுமன்றி உயர்மட்டத்தினரிடமிருந்து பெரும்பாலும் அப்படியான நடவடிக்கைகளுக்கு ஆதரவும் கொடுக்கப்பட்டது,” என்கிறது ஆராய்ச்சி அறிக்கை.
நெதர்லாந்து ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளை, அதிகாரிகளை எதிர்த்தவர்களைப் பெரும் கூட்டமாகத் தடுத்து வைத்தல், மரண தண்டனை, சித்திரவதைக்கு உட்படுத்துவது இந்தோனேசியாவில் வழக்கமாகக் கையாளப்பட்டு வந்திருக்கிறது. சுதந்திரப் போராட்டக்காரர்கள் இருந்ததாகக் கருதப்பட்ட கிராமங்களை எரித்துப் பூண்டோடு அழிப்பதுவும் பல தடவைகள் நடந்தது.
1945 இல் இந்தோனேசியா ஒரு சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்துகொண்டது. அதை ஏற்காத நெதர்லாந்து அரசு தனது படைகளை அனுப்பியது. 1949 வரையான காலக்கட்டத்தில் தமது சுதந்திரத்துக்காகப் போராட்டத்தில் இறங்கியவர்களில் சுமார் 100,000 பேரையாவது டச்சுக்காரர் ஒழித்துக் கட்டினர்.
சாள்ஸ் ஜெ. போமன்