இந்தோனேசியாவில் ஐந்து வருடமாக நிரந்தரமான ஒரு வாழ்வுக்காகக் காத்திருந்த ஆப்கானிய அகதி தனக்குத் தீவைத்துக்கொண்டார்.

அகதிகளுக்குத் தனது நாட்டில் புனர்வாழ்வு கொடுப்பதற்கான ஐ.நா-வின் பட்டயத்தில் சேர்ந்துகொள்ளாத நாடுகளிலொன்றான இந்தோனேசியாவில் சுமார் 13,000 அகதிகள் புகலிடம் தேடி வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஹசாரா சிறுமான்மையினத்தவர்கள் அவர்கள். ஒரு மாதத்துக்கும் மேலாகத் தமக்கு நிரந்தர வாழ்வுக்கான இடம் கேட்டு 24 மணியும் நாட்டின் அகதிகள் திணைக்களத்துக்கு முன்னார் இருந்து போராடி வருகிறார்கள் பல அகதிகள். 

ஒரு தசாப்தத்துக்கும் அதிகமாக இந்தோனேசியாவில் தமது எதிர்காலம் பற்றி எதுவுமே தெரியாமல் வாழ்ந்துவரும் அவர்களில் 13 பேர் 2016 க்குப் பின்னர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். 2016 இல் ஆப்கானிஸ்தானுக்கு வந்து தற்போது 22 வயதான அஹமத் ஷா என்ற இளைஞன் பொறுமையிழந்து தன் மீது பெற்றோலை ஊற்றித் தீவைத்துக்கொண்டான். உடலில் பலமான எரிகாயங்களுடன் அவனை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.

ஐ.நா-வின் அகதிகள் புனர்வாழ்வு ஒப்பந்தத்தில் இந்தோனேசியா இல்லாததால் அங்கே வரும் அகதிகளை வாழவைக்க வேறொரு நாட்டையே அவர்கள் நாடவேண்டும். அதுவரை அரசு அவர்களுக்கு மாதாமாதம் சுமார் 86 டொலர்கள் பெறுமதியான தொகையைக் கொடுத்துத் தங்குமிடமும் கொடுத்து வருகிறது. 

தற்காலிகமாக அவர்களுக்குத் தங்குமிடம் கொடுத்திருப்பதாகக் கூறும் இந்தோனேசியா தன் கட்டுப்பாட்டில் வாழும் அவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளைப் போட்டிருக்கிறது. நகர எல்லையைவிட்டுப் போகலாகாது, எவ்வித வாகனங்களையும் சொந்தமாக வைத்திருக்க முடியாது, வேலை செய்யவோ, கல்வியில் ஈடுபடவோ தடை ஆகியவை அவற்றில் முக்கியமானதாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்