வித்தியாசமான தடுப்பு மருந்தான நோவாவாக்ஸ் இந்தோனேசியாவில் அங்கீகரிக்கப்பட்டது.

தற்போது பாவிக்கப்படும் கொவிட் 19 க்கு எதிராகச் செயற்படும் தடுப்பு மருந்துகள் போலன்றி வித்தியாசமான முறையில் இயங்கும் தடுப்பு மருந்தை அமெரிக்காவின் நோவாவாக்ஸ் நிறுவனம் தயாரித்துச் சந்தைக்குக் கொண்டுவந்திருக்கிறது. அதைப் பாவனைக்கு அனுமதிக்கும் முதலாவது நாடாகியிருக்கிறது இந்தோனேசியா.

புரதத்தையும், அத்துடன் சேர்ந்து செயற்படக்கூடிய ஒரு உந்துசக்தியையும் பாவித்து உடலின் எதிர்ப்புச்சக்தியைப் பலப்படுத்துகிறது நோவாவாக்ஸ் தடுப்பு மருந்து. இரண்டு ஊசிகளாக இது கொடுக்கப்படும். பைசர் நிறுவனத்தின் கொமிர்னாட்டி தடுப்பு மருந்து போல நோவாவாக்ஸ் தடுப்பு மருந்து கடும் குளிரில் பாதுகாக்கப்பட வேண்டியதில்லை. எனவே, வறிய நாடுகளில் கொவிட் 19 க்கு எதிராகப் பாவிக்கப்படுவதில் அது பெருமளவில் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேசியாவுக்கு அடுத்ததாக ஜப்பானாலும் நோவாவாக்ஸ் தடுப்பு மருந்து அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த வருடங்களில் சுவீடன் 2.2 மில்லியன் நோவாவாக்ஸ் தடுப்பு மருந்தை வாங்கிக்கொள்ள ஒப்பந்தம் செய்திருக்கிறது.

நோவாவாக்ஸ் தடுப்பு மருந்து கொவிட் 19 க்கு எதிராக 90 விகித எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது என்று பரிசீலனைகள் தெரிவிக்கின்றன. அத்துடன் அமெரிக்கா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் பரவும் அவ்வியாதியின் வகைகளுக்கு எதிராகவும் அம்மருந்து செயற்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்ரேலியா, கனடா, இந்தியா, பிலிப்பைன்ஸ், ஐக்கிய ராச்சியம் ஆகிய நாடுகளிலும் தமது தடுப்பு மருந்தை விற்பனை செய்யும் அனுமதியைக் கோரியிருக்கிறது நோவாவாக்ஸ் நிறுவனம்.

சாள்ஸ் ஜெ. போமன்