பிரபல தடுப்பூசி எதிர்ப்பாளர்களுக்கு, “கடும் கொவிட் 19 நோயாளிகளை வந்து பாருங்கள்,” என்று பகிரங்கமாக அழைப்பு, ரஷ்யா.

ரஷ்யாவின் பெரிய மருத்துவமனைகளில் கொவிட் 19 நோயாளிகளுக்காகச் சேவை செய்யும் முக்கிய மருத்துவர்கள் குழுவொன்று வித்தியாசமான முறையில் தடுப்பூசி எதிர்ப்பாளர்களை அணுகியிருக்கிறது. ஒரு பகிரங்கக் கடிதம் மூலம் தடுப்பூசி எதிர்பாளர்களின் பிரபலங்களை அவர்கள் தமது கடும் நோயாளர் பகுதிக்கு விஜயம் செய்யும்படி வரவேற்றிருக்கிறார்கள்.

“உயிர்களைக் காப்பதில் நாம் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறோம். ஆயினும், உங்கள் எழுத்துக்களை, வார்த்தைகளைப் பலர் கேட்பதால் உங்களை எங்களுடைய கடும் நோயாளிகள் பகுதிக்குக் கூட்டிச்சென்று சுற்றிக்காட்டத் தயார், வாருங்கள். ஒருவேளை அதன் பின்பு உங்கள் மனது மாறக்கூடும். இறப்பவர்களின் எண்ணிக்கை குறையும்,” என்கிறது மருத்துவர்களின் அழைப்பு.

வயதுக்கு வந்தவர்களில் சுமார் 37 % ரஷ்யர்களே இதுவரை முழுசாகத் தடுப்பு மருந்தைப் பெற்றிருக்கிறார்கள். தினசரி ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறக்கிறார்கள். 267,000 பேர் ரஷ்யாவில் இக்கொடும் வியாதியால் இறந்திருக்கிறார்கள். 9.4 மில்லியன் பேருக்குத் தொற்று உண்டாகியிருக்கிறது. குறையாத வேகத்துடன் தொற்றுக்களும், இறப்புக்களும் தொடர்கின்றன.

ஒஸ்கார் குச்சேரா – தொலைக்காட்சிப் பிரபலம், ஏகோர் பெரோவ் – நடிகர், கொன்ஸ்டாண்டின் கிளிச்சேவ் – ரொக் இசைப் பாடகர் ஆகியோரும் அடங்குவர்.

எதிர்ப்பாளர்களான அவர்களில் தடுப்பூசியின் வீர்யத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறவர்கள் முதல் தடுப்பூசிச் சான்றிதழின் பாவிப்பை ஹிட்லர் காலத்தில் யூதர்கள் நட்சத்திர அடையாளத்துடன் திரியவேண்டிய நிலைமைக்கு உட்படுத்தப்பட்டதுடன் ஒப்பிடுகிறவர்கள் வரை உண்டு.

மருத்துவர்களின் அந்தப் பகிரங்கக் கடித முயற்சியை ரஷ்யாவின் அரசு மெச்சியிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்