இந்தோனேசியாவில் வேகமாகப் பரவும் நாய் இறைச்சி உண்ணலில் 7 % மக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

உலகின் மிகப்பெரிய முஸ்லீம்கள் தொகையைக் கொண்ட நாடான இந்தோனேசியாவில் 270 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். 87 % விகிதமானோர் முஸ்லீம்கள். அவர்களிடையே பன்றி இறைச்சி, நாய் இறைச்சி உண்ணல் தவிர்க்கப்படவேண்டியதாகக் கருதப்படுகிறது. ஆயினும், நாட்டில் சமீப காலத்தில் வேகமாகப் பரவிவருகிறது நாய் இறைச்சி உண்ணல். ஏழு விகிதமான இந்தோனேசியர்கள் அந்த இறைச்சியை உண்பதைச் சாதாரணமாகக் கருதுகிறார்கள்.

வட சுலவேசி, வடக்கு சுமாத்திரா மற்றும் கிழக்கு நூசா டென்காரா பிராந்தியங்களில் பெரும்பாலானோர் நாய் இறைச்சியை உண்டு வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கிறீஸ்தவர்களாகும். மெடான் நகரில் நாய் இறைச்சியைப் பரிமாறும் உணவகங்கள் பரவலாக இருக்கின்றன. பழங்குடியினரான படக் இனத்தவர் அங்கே பரவலாக வாழ்கிறார்கள். நாய் இறைச்சியை அவர்கள் விரும்பி உண்கிறார்கள்.

நாய் இறைச்சி உண்ணல் காரணமாக நகரங்களில் நாய்களைக் களவாடுதலும் அதிகமாகியிருக்கிறது. வீதிகளில் திரியும் நாய்களைக் குறிப்பிட்ட இரசாயணமொன்றை உணவுடன் கலந்து வைத்து அவற்றை மயக்கமடைய வைக்கின்றனர். அது நாயின் இறைச்சியில் சேராது. அதன் பின் அந்த நாய்கள் இறைச்சிக்காக விற்கப்படுகின்றன.

அத்துடன் நாய்களின் இறைச்சி மக்களின் ஆரோக்கியத்துக்குக் கேடுகளை உண்டாக்கும் என்றும் குறிப்பிட்டு ஒரு சில அமைப்புக்கள் அந்தப் பழக்கத்தைச் சட்டத்துக்கு விரோதமானதாக்கும்படி அரசை வேண்டிக்கொண்டிருக்கின்றன. சில பிராந்தியங்களில் நாய் இறைச்சி விற்பதைத் தடை செய்து சட்டங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. 

முதல் தடவையாக கடந்த வருடம் ஜாவாவைச் சேர்ந்த இறைச்சி வியாபாரி ஒருவர் நாய் இறைச்சி விற்ற குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டிருக்கிறார். மெடான் நகர ஆளுனர் அப்பிராந்தியத்தில் நாய் இறைச்சியைத் தடைசெய்து உத்தரவிடவே அப்பகுதி மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தனது முடிவிலிருந்து பின்வாங்கிய ஆளுனர், “தான் போட்டது சட்டமல்ல ஒரு ஆலோசனை மட்டுமே,” என்றார்.

“மற்றைய விலங்குகளைக் கொன்று சாப்பிடுவது ஏற்றுக்கொள்ளப்படுவது சாதாரணம் என்றால் ஏன் நாய்களை இறைச்சிக்காகக் கொல்வது தவறு?” என்ற கேள்வி அவ்விறைச்சியின் ரசிகர்களால் கேட்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *