உக்ரேனிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தமது வீட்டுகளை விட்டு வெளியேறி அகதிகளானார்கள்.
உக்ரேன் தலைநகர எல்லைக்குள் நுழைந்துவிட்ட ரஷ்ய இராணுவத்தை உக்ரேனிய இராணுவம் ஆக்ரோஷத்துடன் எதிர்கொள்வதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதே சமயம் நாட்டின் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே தமது வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களை நாடுவதாக ஐ.நா-வின் அகதிகள் அமைப்பு தெரிவித்திருக்கிறது.
ரஷ்யா, பெலாரூஸ் தவிர்ந்த போலந்து, ருமேனியா, மோல்டாவியா ஆகிய நாடுகளையும் எல்லைகளாகக் கொண்ட நாடு உக்ரேன். ஐ.நா அமைப்பு உக்ரேனின் எல்லை நாடுகள் அகதிகளைப் பாதுகாப்பாக வரவேற்பதற்காகத் தமது எல்லைகளைத் திறந்துவைத்திருக்க வேண்டும் என்று ஐ.நா கோரியிருந்தது. எல்லை நாடுகள் உட்பட மற்றைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அரசுகளும் உக்ரேனிய அகதிகளை வரவேற்கத் தாம் தயார் என்று கூறி அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனின் எல்லை நாடுகளுக்கு அகதிகளை வரவேற்று அவர்களுக்கான உதவிகளைச் செய்ய முடிந்தவரை உதவி செய்வதாக உறுதி கூறியிருக்கிறது. மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தமது பங்குக்கு உக்ரேனியர்களுக்கு அடைக்கலம் கொடுக்கத் தயார் என்று அறிவித்திருக்கின்றன.
உக்ரேனியப் பல்கலைக்கழகங்களில் படித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த சுமார் 470 பேர் உக்ரேன் போரால் நாட்டுக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு உதவப் பக்கத்து நாடுகளின் உதவியுடன் இந்திய வெளிவிவகார அமைச்சு செயற்பட்டு வருகிறது. அவர்களில் சுமார் 50 பேர் ருமேனியாவின் எல்லையொன்றின் மூலம் வியாழனன்று வெளியேற்றப்பட்டார்கள். மற்றவர்களையும் ருமேனியாவுக்குப் பாதுகாப்பாகக் கொண்டுபோக ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.
உக்ரேனின் மேற்கிலிருக்கும் லிவிவ் நகர ரயில் நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறுவதற்காகக் காத்திருக்கிறார்கள். 18 – 60 வயதான ஆண்களெவரும் நாட்டை விட்டு வெளியேறலாகாது என்று தடை போடப்பட்டிருக்கிறது. எனவே லிவிவ் வழியே பக்கத்து நாடான போலந்துக்குச் செல்லப் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளுமே காத்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்