நாட்டின் பாதுகாப்புச் செலவுகளை வருடாந்திர மொத்த தயாரிப்பின் 2 விகிதமாக்க சுவீடன் முடிவு.

சுவீடனைச் சுற்றியுள்ள பிராந்தியத்திலும், ஐரோப்பாவிலும் ஏற்பட்டிருக்கும் நிலையை எதிர்கொள்ள நாட்டின் பாதுகாப்புக்காகச் செலவிடப்படும் தொகையைக் கணிசமாக உயர்த்தப்போவதாக வியாழனன்று சுவீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சன் அறிவித்தார். அச்செலவானது வருடாந்தர தேசிய தயாரிப்பின் 2 % ஆக உயர்த்தப்படும் என்று அவர் பிரத்தியேகமாகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியொன்றில் தெரிவித்தார்.  

சோவியத் யூனியனின் சிதறலுக்குப் பின்னர் ஐரோப்பாவில் நிலவிவந்த அமைதியான அரசியல் சூழல் மாறிவிட்டதாகவே ஐரோப்பிய நாடுகளெல்லாம் கருதுகின்றன. உக்ரேனுக்குள் ரஷ்ய இராணுவத்தை அனுப்பிய புத்தினின் செயல், ஐரோப்பாவைப் போர் நிலைமைக்குத் தள்ளிவிட்டதாகக் கணிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் எந்தப் பிரச்சினையையும் பேசியே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று உறுதியாக இருந்த ஜேர்மனி தனது பாதுகாப்புச் செலவைப் பெருமளவில் அதிகப்படுத்துவதாகத் தெரிவித்திருந்தது. அதையடுத்து ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாகத் தமது பாதுகாப்புக்கான செலவுகளை அதிகப்படுத்தி வருகின்றன.

“இன்று நாம் ஸ்வீடன் மக்களுக்கும் எம்மைச் சுற்றியுள்ள உலகிற்கும் ஒரு தெளிவான செய்தியுடன் ஒரு புதிய முயற்சியை முன்வைக்கிறோம். ஸ்வீடனின் தற்காப்புத் திறனைப் பெரிதும் பலப்படுத்த முடிவெடுத்திருக்கிறோம். எங்களால் முடிந்த அளவு விரைவாக எங்களுடைய புதிய பாதுகாப்பு திட்டத்தை நாம் செயற்படுத்துவோம்,” என்று பிரதமர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் சகல கட்சிகளின் ஆதரவும் இவ்விடயத்தில் பிரதமருக்குக் கிடைத்திருக்கிறது. பாதுகாப்புச் செலவை உயர்த்தும் அதே சமயம் இராணுவப் பயிற்சிக்காக நாட்டில் முன்னரை விட அதிகமானோர் அனுப்பப்படுவார் என்றும் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் ஹுல்ட்குவிஸ்ட் தெரிவித்தார். நாட்டின் கரையோரங்களில் வாழ்பவர்கள் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றைக் கண்டால் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *