போலி
உலகம் போலியாய்
போய்க் கொண்டிருக்கிறது
அன்பு போலியாய்
ஆன பின்னர்
அதுவே உண்மை என்றாயிற்று…
பொருள்கள் முதலில்
போலியாய் வந்தன..
ஆட்கள் போலிகள்
ஆகினர் பின்னர்…
பேரும் போலியாய்
போனது கண்டீர்..
கடவுச் சீட்டும்
காகித ஆவணங்களும்
காசைக்காட்ட
போலிகள் ஆயின..
மதங்கள் போலிப் போதனை செய்ய…
மனங்கள் போலிக் கேள்விகள் கேட்டன…
ஆலய முன்றலில் போலிகள்
வளர்ந்தன…
ஆராதனையிலும் போலிகள் புகுந்தன..
ஐ.நா மன்றும் போலி ஆனதால்
அதிக நாடுகள்
போலியைப் போர்த்தன….
வாழ்வு போலி ஆனது போலவே
சாவும் போலிச் சான்றிதழ் கொடுத்தது
மருந்தும் கூட போலி ஆக …
மரணம் இதனால் வெற்றி கொண்டது
சாமிமார் போலி
சாத்திரங்கள் போலி என ….
எல்லைகள் அற்ற
போலிகள் வளர்ந்தன..
காதலில் போலி புகுந்தது….
கணவன் மனைவி
கருத்தொருமித்த
இல்லறம் கூட போலி கண்டது
நீதியும் போலி ஆகிட
நித்தம் நித்தம்….
போலிகள் முளைத்தன
எங்கும் போலி எதிலும் போலி என்றாகிட….
நீலவானம் போலியானது
நீரும் நிலமும் போலி கண்டன…
எல்லாம் போலி ஆகிட
எனது கவியும் போளி ஆனது
போளியா, போழியா, போலியா…..?
ஆம்
இது இலக்கணப் போலி
எழுத்துப் போலி….
தமிழிலும் போலியா……?
எழுதுவது ; துரை சிவபாலன்