ரஷ்யாவுக்கு மாற்றாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எரிவாயுவைக் கொடுக்க அமெரிக்கா உறுதி.
தனது ஐரோப்பியச் சுற்றுப்பயணத்தில் ஐரோப்பாவுடன் நெருங்கிய வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதில் ஜோ பைடன் மும்முரமாக ஈடுபட்டார். வியாழனன்று அடுத்தடுத்து நடந்த நாட்டோ, ஜி 7, ஐரோப்பிய ஒன்றிய மாநாடுகளில் பங்குபற்றிய அவருடன் அந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள் முன்வைத்த வேண்டுகோளும் அதுவே. அதிமுக்கியமாக ஐரோப்பாவுக்கான எரிபொருட்களை ரஷ்யாவுக்கு மாற்றாக வேறு இடங்களிப் பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்கா உதவுவது பற்றிப் பேசப்பட்டது.
“தனது நாட்டின் எரிபொருட்களில் பக்கத்து நாடுகளைத் தங்கவைப்பதன் மூலம் அந்த நாடுகளைத் தனது இஷ்டத்துக்கு ஆட்டிவைக்க முயல்கிறார் புத்தின். அதனால் ரஷ்யா பெற்றுகொள்ளும் இலாபம் நாட்டின் போர்ச்செலவுகளுக்குச் செலவிடப்படுகிறது,” என்று தனது நோக்கத்துக்கான பின்னணியை விளக்கினார் ஜோ பைடன்.
வெள்ளியன்று அவர் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டர் லயனுடன் சேர்ந்து அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். “இந்தப் போர் புத்தினுக்கு ஒரு நீண்டகால இழப்பாகப் பல வழிகளிலும் அமையும்,” என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டர் லயன் குறிப்பிட்டார்.
ஐரோப்பாவும் அமெரிக்காவும் சேர்ந்து ஐரோப்பாவை ரஷ்யாவின் எரிபொருள் தங்குதலிலிருந்து விடுபட ஈடுபடுவார்கள். அதன் நீண்டகால, அதிமுக்கிய விளைவாக இயற்கையைப் பாதிக்காத எரிபொருட்களைப் பெருமளவில் பாவிப்பதற்குச் சந்தைக்குக் கொண்டுவருவதாக இருக்கும் என்பதில் இரு தலைவர்களும் ஒருமுகப்பட்டிருந்தனர்.
முதல் கட்டமாக இவ்வருடம் ஐரோப்பாவுக்குத் தேவையான ஒரு பகுதி எரிவாயுவை அமெரிக்கா விற்பனை செய்யும். அதன் பங்கு 2030 ம் வருடம் வரை அதிகரிக்கப்படும். அதே சமயம் எரிவாயுவின் பாவிப்பையும் பெருமளவில் இரண்டு பக்கத்தாரும் குறைத்துக்கொள்வர். அதற்கான பலவித தொழில்நுட்பங்களில் முதலீடுகள் செய்யப்படும், ஆராய்ச்சிகளுக்கு உதவிகள் செய்யப்படும்.
இதே சமயம் ரஷ்யாவின் எரிபொருட்களில் பெரிதும் தங்கியிருக்கும் ஜெர்மனி, வரவிருக்கும் கோடை காலத்துக்குள் பெற்றோலியக் கொள்வனவைப் பாதியாகக் குறைத்து அதையடுத்த மாதங்களில் முற்றாக நிறுத்திவிடுவதாக அறிவித்திருக்கிறது. எரிவாயுவைப் பொறுத்தவரை நிலைமை சிக்கலானது என்று குறிப்பிட்ட தொழில் துறை அமைச்சர் அதுவும் 2024 இல் நிறுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ போமன்