ஜோ பைடனின் ஐரோப்பிய விஜயத்தில் அதிமுக்கியமான மாநாடுகள் அடுத்தடுத்துக் காத்திருக்கின்றன.

உக்ரேன் எல்லைக்குள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் படைகள் நுழைந்து ஒரு மாதம் நிறைவேறிவிட்டன. சர்வதேச ரீதியாக ரஷ்யாவின் வர்த்தகம் மீதும், புத்தினுக்கு நெருங்கியவர்கள் மீதும் போடப்பட்ட தடைகள் இதுவரை ரஷ்யாவின் போர்வெறியை நிறுத்தியதாகத் தெரியவில்லை. பதிலாக, புத்தின் இரசாயண, உயிரியல் ஆயுதங்களைப் பாவிக்கக்கூடுமா என்ற பயம் எழுந்திருக்கிறது.

குறுகிய காலத்தில் திட்டமிட்டு அறிவிக்கப்பட விஜயத்தில் ஜோ பைடன் இன்று வியாழனன்று ஆரம்பித்து நாலு நாட்கள் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரில் வந்து இறங்கவிருக்கும் அவர் ஐரோப்பிய ஒன்றியம், நாட்டோ, ஜி 7 நாடுகள் ஆகியவற்றின் மாநாடுகளில் கலந்துகொள்ளவிருக்கிறார். சந்திப்புக்களின் நோக்கம் மேலும் கட்டுப்பாடுகளை ரஷ்யா மீது போடலாமா, அவை எவை என்பதைத் திட்டமிடுவதாகும் என்று குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்காவிலிருந்து வெளியாகியிருக்கும் செய்திகள் அடுத்த கட்டமாக ரஷ்யப் பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் மீதான கட்டுப்பாடுகள் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கில், மேலும் போட்டிருக்கும் கட்டுப்பாடுகளில் கண்டறிப்பட்டிருக்கும் ஓட்டைகளை அடைத்து அதன் மூலம் ரஷ்யப் பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் நெருக்குவதாகும். மேலுமொரு புதிய நடவடிக்கைக்கு ஒன்றியம் இன்னும் தயாராகவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்க்கொள்வனவுக்காகத் தங்கியிருக்கும் ஐரோப்பா தனது எரிசக்திக் கொள்வனவுக்காகக் கடந்த மாதத்தில் சுமார் 14 பில்லியன் எவ்ரோக்களைச் செலவிட்டிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. 

ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டர் லாயன் ஜோ பைடனின் விஜயத்தில் கேட்டுக்கொள்ளவிருக்கும் விடயம் அமெரிக்கா வரவிருக்கும் இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருளை விநியோகிக்குமா என்பதாகும்.

நாட்டோ அமைப்பினூடாக அமெரிக்கா மேலும் உதவிகளை உக்ரேனுக்கு வழங்கவிருக்கிறது. இரசாயண, உயிரியல், அணு ஆயுதங்களால் உக்ரேன் தாக்கப்பட்டால் அவைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளப் பாதுகாப்பு அணிகள் வழங்கப்படவிருக்கின்றன. அப்படியான ஆயுதங்களை ரஷ்யா போரில் பாவிக்குமானால் சர்வதேசத்தின் பதில் நடவடிக்கை மிகவும் காட்டமானதாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் சமீப நாட்களில் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டோ இராணுவத்தைப் பலப்படுத்த மேலும் போர்வீரர்கள் ஐரோப்பாவுக்கு அனுப்பப்படவிருக்கிறார்கள். தனது மாநாடுகளை முடித்துக்கொண்டு போலந்துக்கு விஜயம் செய்யவிருக்கும் ஜோ பைடன் அங்கே நாட்டோ இராணுவத்தினரைச் சந்திப்பார். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *