ஐ.நா-வின் தலைமையில் மரியபூல் இரும்புத்தொழிற்சாலைக்குள் மாட்டிக்கொண்டவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.
உக்ரேனின் துறைமுக நகரமான மரியபூல் நகரம் சுமார் ஒரு மாதமாக ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. நகரின் பெரும்பாலான பிராந்தியம் சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் மிகப்பெரிய இரும்புத் தொழிற்சாலை வளாகத்தினுள்ளும், கட்டடத்தின் சுரங்கப்பாதைகளுக்குள்ளும் சாதாரண குடிமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகலிடம் தேடி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை வெளியேற்றுவது பற்றிச் ஒருசில நாட்களுக்கு முன்னர் ரஷ்ய ஜனாதிபதியின் அனுமதியைப் பெற்றிருக்கிறார் ஐ.நா-வின் பொதுச் செயலாளர்.
பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் குறிப்பிட்டபடி ஐ.நா-வினால் செஞ்சிலுவைக் குழுவுடன் சேர்ந்து தயாராக்கப்பட்ட குழுவொன்றினரின் உதவியுடன் அந்தத் தொழிற்சாலைக்குள் இருப்போர் வெளியேற்றப்பட்ட்டு வருவதாக ஞாயிறன்று பிற்பகல் செய்திகள் வெளியாகின்றன. மதியத்தை அடுத்து அங்கேயிருந்த காயமடைந்தவர்கள், பெண்கள், குழந்தைகள் சிலர் வெளியேற்றப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருகின்றன.
உக்ரேனிய அரசு பல தடவைகள் தாம் அந்த நகருக்கான போரைக் கைவிடுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தது. இரும்புத் தொழிற்சாலைக்குள் தஞ்சம் புகுந்திருந்தவர்களுடன் சுமார் ஆயிரம் மரியபூல் பாதுகாப்புப் படையினரும் தங்கியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டு வந்தது. அவர்களும் வெளியேறி வருகிறார்களா என்ற செய்தியெதுவும் இதுவரை தெரியவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்