புரொத்தாசேவிச்சின் நண்பிக்கு பெலாருஸ் ஆறு வருடச் சிறைத்தண்டனை விதித்தது.
சோபியா சப்பேகா என்ற ரஷ்யப் பெண்ணுக்கு பெலாருஸ் நீதிமன்றம் ஆறு வருடச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருக்கிறது. தண்டனைக்கான காரணம் அவர் சமூகத்தில் வெறுப்பைப் பரப்பினார் என்பதாகும். ரோமன் புரொத்தாசேவிச் என்ற பெலாரூஸ் அரசை விமர்சனம் செய்யும் பத்திரிகையாளரின் நண்பியான இவர் கடந்த வருடம் பெலாருஸ் விமான நிலையத்தில் வைத்து புரொத்தாசேவிச்சுடன் கைது செய்யப்பட்டவராகும்.
கடந்த வருடம் தமது வான்வெளியில் பறந்துகொண்டிருந்த ராயன் ஏர் விமானத்தில் குண்டு இருப்பதாக அறிவித்து, மறித்து மின்ஸ்க் விமான நிலையத்தில் இறக்கியது பெலாருஸ் அரசு. கிரீஸின் ஏதென்ஸிலிருந்து லித்தாவனின் வில்னியூசுக்கு அவ்விமானம் பறந்துகொண்டிருந்தது. உண்மையான காரணம் பெலாரூஸ் சர்வாதிகாரி லுகசென்கோவை விமர்சிக்கும் பத்திரிகையாளர் ரொமான் புரொத்தாசேவிச் பயணித்ததாகும். அவருடன் பயணம் செய்துகொண்டிருந்தவர் 24 வயதான சோபியா சப்பேகா.
பெலாருஸின் அடாவடித்தனம் சர்வதேச ரீதியில் பெரும் விமர்சனத்தை உண்டாக்கியது. பெலாருஸ் மீது ஏற்கனவே முடக்கங்களை அறிமுகப்படுத்தியிருந்த அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை மேலும் கடுமையான தடைகளைக் கொண்டுவந்தன. அத்துடன் பெலாருஸ் விமானங்கள் ஐரோப்பிய ஒன்றிய வான்வெளிமீது பறக்கவும் அந்த நாடுகளில் இறங்கவும் தடை விதிக்கப்பட்டது.
ரொமான் புரொத்தாசேவிச் மீதான வழக்கு இன்னும் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்