வட அயர்லாந்தில் முதல் தடவையாக ஜனநாயக முடிவு, “எங்களுக்காக நாம்” என்கிறது.
ஐக்கிய ராச்சியத்தின் பிடியிலிருக்கும் வட அயர்லாந்துப் பகுதியில் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தேசியவாதக் கட்சியான ஷின் பெய்ன் முதல் தடவையாகப் பெருமளவு ஆதரவைப் பெற்றிருக்கிறது. ஆயுதமெடுத்துத் தமது வட அயர்லாந்துப் பகுதியானது அயர்லாந்துடன் சேரவேண்டுமென்று போராடிய ஐ.ஆர்.ஏ அமைப்பு தனது ஆயுதப் போரைக் கைவிட்ட பின்னர் ஜனநாயகப் பாதைக்கு வந்தபோது ஷின் பெய்ன் என்ற கட்சியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய சோஷலிசக் கோட்பாடுகளைக் கொண்ட ஷின் பெய்ன் கட்சியானது 29 % வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 90 பாராளுமன்ற அங்கத்துவர்களில் 27 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் ஷின் பெய்ன் இதுவரை முதலிடத்திலிருந்த டெமொகிரடிக் யுனியனிஸ்ட் கட்சியை இரண்டாமிடத்துக்குத் தள்ளியிருக்கின்றது. DUP என்ற 25 இடங்களைப் பெற்ற கட்சியினர் வட அயர்லாந்தானது ஐக்கிய ராச்சியத்தின் ஒரு பகுதியாகவே இருக்கவேண்டும் என்று கோரும் புரொட்டஸ்தாண்ட் மார்க்கக் கிறீஸ்தவர்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாகும்.
ஷின் பெய்ன் கட்சியின் உப தலைவர் மிஷல் ஓ’நீல் நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார்.
“இன்றைய நிலைமை எங்கள் சமூகத்தில் ஒரு மாற்றத்துக்கு வழிவகுத்திருக்கிறது. நான் இந்தச் சமூகத்தின் மத, சமூக வித்தியாசங்களைக் கவனிக்காமல் எல்லோரையும் ஒரேயளவு கௌரவத்துடன் நடத்துவேன்,” என்று ஓ’நீல் தனது நன்றியுரையில் தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகளுக்காக முதலாவது வாழ்த்துக்களை ஷின் பெய்ன் தலைவியான மேரி லூ மக்டொனாட்டுக்குத் தெரிவித்தவர் ஸ்கொட்டிஷ் முதலமைச்சர் நிக்கொலா ஸ்டுர்ஜியொன் ஆகும். ஸ்டுர்ஜியொன் ஸ்கொட்டிஷ் தேசியவாதக் கட்சியின் தலைவராகும். ஷின் பெய்ன் போலவே ஐக்கிய ராச்சியத்திடமிருந்து விலகுவதைக் கோட்பாடாகக் கொண்டிருக்கும் ஸ்கொட்லாந்தின் தேசியவாதிகள் தனிநாடு ஒன்றை நிறுவ விரும்புகிறர்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்தமையால் வட அயர்லாந்தின் எல்லை நிர்வாகம், வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கின்றன. ஸ்கொட்லாந்தும் ஐ.ஒன்றியத்தில் தமக்குக் கிடைத்திருந்த சந்தர்ப்பங்களை இழந்துவிட்டதாகக் கருந்துகின்றது. எனவே, இந்தத் தேர்தல் முடிவு ஐக்கிய ராச்சியத்துக்குப் புதிய தலைவலிகளைக் கொண்டுவரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
வட அயர்லாந்து பாராளுமன்றம் ஐக்கிய ராச்சிய ஆதரவாளர்கள், பிரிவினை ஆதரவாளர்கள் இருவருக்குமிடையேயான அதிகாரப் பிரிவின் அடிப்படையில் செயற்படுகிறது. அங்கே முதலமைச்சர் ஸ்தானத்தை இழந்த ஐக்கிய ராச்சிய ஆதரவாளர்கள் ஏற்பட்டிருக்கும் நிலைமையில் தாம் ஒரு அரசாங்கம் அமைவதற்கு உதவப்போவதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் வட அயர்லாந்துப் பகுதிக்கும் இருக்கும் பிரத்தியேக ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தால் தான், தாம் ஒரு இயங்கும் அரசாங்கத்தை வட அயர்லாந்தில் உண்டாக உதவுவோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்