அடுத்த தேர்தலில் வெற்றிபெற ரிபப்ளிகன் கட்சிக்கு உதவத் தயாராக இருக்கும் டிரம்ப்.

அமெரிக்க பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மக்கார்த்தி புளோரிடாவுக்குக் குடிபெயர்ந்திருக்கும் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறார். “மனம் திறந்த சம்பாஷணை,” என்று குறிப்பிடப்படும் அச்சந்திப்பில் தனது கட்சியினரை மீண்டும் பதவியிலமர்த்த டிரம்ப் உறுதிபூண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

தேர்தலில் தோற்றுப்போய்த் தமது ஜனாதிபதியின் மீது பல கோணங்களிலிருந்தும் வரும் எதிர்ப்பலைகளைச் சந்திக்கமுடியாமல் ரிபப்ளிகன் கட்சியினர் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். டிரம்ப் மேலெழும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வதென்பதில் அவர்களிடையே பிளவுகள் ஏற்பட்டிருக்கின்றன. 

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கெவின் மக்கார்த்தி டிரம்ப்பை விமர்சிக்கும் தனது கட்சிக்காரரைக் காட்டமாகச் சாடிவிட்டு புளோரிடா சென்று டிரம்ப்பைச் சந்தித்து அடுத்த தேர்தலுக்கான வியூகத்தை வகுக்க ஆரம்பித்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. “அமெரிக்காவைக் காப்பாற்றுவோம்” என்ற பெயரில் டிரம்ப் ஆரம்பித்திருக்கும் அமைப்பு ரிபப்ளிகன் கட்சியினருடன் சேர்ந்து மக்களை நேரிடப்போவதாகத் தெரிகிறது.

“எப்போதையும் விட அதிகமான அளவுக்கு டிரம்பின் ஆதரவு அதிகரித்திருக்கிறது,” என்று டிரம்ப்பின் இயக்கத்தின் சார்பில் அறிக்கை விடப்பட்டிருக்கிறது. “எங்கள் கட்சியினரே ‘ஜனவரி 6 வன்முறைக்குக் காரணம் டிரம்ப் என்று குறிப்பிட்டு அவரை நீதிமன்றத்தின் முன்னால் நிற்கவைக்க முன்வருவது வெட்கத்துக்குரியது. அவர் இப்போது ஒரு தனிப்பட்ட குடிமகன்’ என்கிறார் கெவின் மக்கார்த்தி.

டிரம்ப்புக்கு எதிராக நடப்பவர்களைக் கட்சியிலிருந்து அகற்றவேண்டுமென்ற கோரிக்கையும் ரிபப்ளிகன் கட்சிக்குள் எழுந்திருக்கிறது. கட்சியின் தேசிய தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கும் ரொன்னா மக்டானியல் “2024 தேர்தலில் நாம் டிரம்ப்பை மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிந்தெடுப்போம் என்ற உறுதி கொடுக்க முடியாது. டிரம்ப் எமது கட்சிக்காக உழைப்பதானால் அவர் 2022 பாராளுமன்றத் தேர்தல்களில் நாம் மீண்டும் பெரும்பான்மையைக் கைப்பற்ற உதவுவதில் ஆரம்பிக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தான் ஈடுபடுவாரென்றும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வாக்குகளை ஒழுங்குசெய்து தன்னை வெற்றிபெற உதவ மறுத்த ஜோர்ஜியாவின் கவர்னர் போன்ற, கட்டுப்படாதவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன், என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *