ஆபிரிக்க, அராபியச் சரித்திரத்தில் தன் பெயரைப் பதித்துக்கொண்டார் ஓன்ஸ் ஜபூர் டென்னிஸ் மூலம்.

உலக நாடுகளெங்கிலும் பிரபலமான விளையாட்டுக்களில் ஒன்றாகிவிட்ட டென்னிஸில் இதுவரை எவரும் ஆபிரிக்காவிலிருந்தோ, அராபிய நாடுகளிலிருந்தோ முக்கிய கோப்பைகளை வென்றதில்லை. அந்த வரட்சிக்கு முடிவு கட்டியிருக்கிறார் டுனீசியாவைச் சேர்ந்த ஓன்ஸ் ஜபூர் ATP 1000 போட்டியில் வென்றதன் மூலம். 

வார இறுதியில் ஸ்பெய்னின் மாட்ரிட் நகரில் நடந்த போட்டிகளில் வென்று சரித்திரம் படைத்த ஓன்ஸ் ஜபூரின் வயது 27 ஆகும். தனது வெற்றி மேலும் பல ஆபிரிக்க, அராபியப் பெண்களை டென்னிஸ் விளையாடுவதற்குத் தூண்டவேண்டும் என்று குறிப்பிடும் ஓன்ஸ் ஜபூரின் அடுத்த குறி ஒரு Grand Slam வெற்றியைப் பெறுவதாகும்.   

மே 22 ம் திகதி பிரான்ஸில் நடக்கவிருக்கும் Championnats Internationaux de France போட்டிகளில் பங்குபற்றவிருக்கிறார் ஜபூர். சரளைக்கற்களாலான மைதானத்தில் நடக்கும் ஒரேயொரு Grand Slam போட்டி அதுவாகும். 1891 இல் ஆரம்பித்து வருடாவருடம் நடந்துவரும் அந்தப் போட்டியில் வெல்வது மேலும் கௌரவமானது. 

ஸ்பெய்னில் நடந்த போட்டிகளில் கோப்பையை வென்றதன் மூலம் ஓன்ஸ் ஜபூர் தற்போது உலகின் ஏழாவது மிகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனை என்ற இடத்தைக் கைப்பற்றியிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *