பிலிப்பைன்ஸ் மக்கள் தேர்தலில் முன்னாள் சர்வாதிகாரியின் மகனை ஏக ஆதரவுடன் தெரிவுசெய்தார்கள்.
சர்வாதிகாரியாக இரும்புக் கையுடன் பிலிப்பைன்ஸை [1966 – 1986] ஆண்ட பெர்டினண்ட் மார்க்கோஸின் மகன் பிலிப்பைன்ஸில் நடந்த தேர்தலில் மிகப் பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார். பெர்டினண்ட் ஜூனியர் மார்க்கோஸுக்குக் கிடைத்த 30 மில்லியன் வாக்குகள் அவருடைய எதிர்வேட்பாளர் பெற்றதை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
பதவியிலிருந்து விலகும் அடாவடித்தனமான ஜனாதிபதி ரொட்ரிகோ டுவார்ட்டேயின் மகள் சாரா டுவார்ட்டே உப ஜனாதிபதிப் பதவியை வெல்வார் என்று கணிக்கப்படுகிறது. சாராவும், பிங் பொங் என்று செல்லமாக அழைக்கப்படும் ஜூனியர் மார்க்கோஸும் சேர்ந்து நாட்டை ஆள்வார்கள் என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.
தேர்தலுக்கு முன்னைய நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் வன்முறைகள் தலைவிரித்தாடின. மிண்டானௌ தீவில் வாக்களிப்பு நடந்த நாளான திங்களன்று மூவர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதற்கு முந்தைய நாள் குண்டுத் தாக்குதலொன்றில் ஒன்பது பேர் உயிரிழந்தார்கள்.
பிலிப்பைன்ஸ் அரசியலமைப்புச் சட்டப்படி வெற்றி பெறும் ஜனாதிபதி ஒரு ஆறு வருடத் தவணை மட்டுமே பதவியிலிருக்கலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்