திங்களன்று அரசியல் கலவரங்களில் 5 பேர் மரணம் 200 பேர் காயமடைந்த சிறீலங்காவில் இராணுவம் காவலுக்கு வந்திருக்கிறது.

சிறீலங்கா இதுவரை காணாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து அதன் காரணமாக அரசியலில் பெரும் சிக்கலான நிலைமையை எதிர்கொண்டுள்ளது. சுமார் ஒரு மாதத்துக்கும் அதிகமாக நாட்டை ஆளும் ராஜபக்சே சகோதர்களைப் பதவியிறங்கும்படி பல்லாயிரக்கணக்கானோர் வெவ்வேறு இடங்களில் அமைதியாகப் போராடி வந்தார்கள். உலக நாடுகள் பலவும் சிலேகித்து வந்த அமைதியான போராட்டங்களைத் திங்களன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சேயின் ஆதரவுக் காடைக்குழுவினர் தாக்கவே வெவ்வேறு இடங்களில் வன்முறை தலைவிரித்தாடியது. 

வெள்ளிக்கிழமையன்று நடந்த பாராளுமன்றக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டபாயா தனது சகோதரன் மஹிந்த ராஜபக்சேவைப் பிரதமர் பதவியிலிருந்து விலகும்படி கேட்டுக்கொண்டிருந்தார். அதையேற்றுத் திங்களன்று பகலில் தனது பதவி விலகல் கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார்.

அதையடுத்து கொழும்பைச் சுற்றியுள்ள பல பிராந்தியங்களிலும் ராஜபக்சேயின் ஆதரவாளர்களைத் தேடித் தாக்கினார்கள் எதிரணியைச் சேர்ந்தவர்கள். தனது வாகனத்தை மறித்தவர்களைத் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் சுட்ட ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அதன் பின்பு தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.

வன்முறையில் ஈடுபட்ட ராஜபக்சே ஆதரவாளர்களை வெவ்வேறு நகரங்களிலிருந்து தலைநகருக்குக் கொண்டுவந்த பேருந்துகளை அடித்து நொறுக்கி, எரித்தார்கள் பலர். நீண்ட காலமாகவே வாழ்வாதாரம் இழந்து கஷ்டப்பட்டவர்களின் கோபம் பல இடங்களில் தீவைப்பாகவும் மாறியது.

அருங்காட்சியகமாக்கப்பட்டிருந்த ராஜபக்சே குடும்பத்தினரின் பாரம்பரிய வீடு தீக்கிரையாக்கப்பட்டது. குருநாகல் நகரில் மஹிந்த ராஜபக்சே வாழும் வீடும் தீவைக்கப்பட்டது. மேலும் பல ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளையும் தாக்கி நொருக்கித் தீவைத்தன வெவ்வேறு கும்பல்கள். 

வன்முறை நாடெங்கும் பரவுவதைக் கவனித்துத் திங்களனு பிற்பகலில் ஒரு நாள் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், மாலையிலும், இரவிலும் பல இடங்களிலும் நிலைமை கட்டுக்கடங்காமலிருக்கவே ஊரடங்குச் சட்டம் புதன் கிழமை வரை நீடிக்கப்பட்டிருக்கிறது. நாட்டிலிருக்கும் சுற்றுலாப் பயணிகள் தமது விமானச் சீட்டுக்களைக் காட்டிப் பயணங்களில் ஈடுபடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

திங்களன்று அதிகாலையில் ஒரு கும்பல் உத்தியோகபூர்வமான பிரதமர் வாசஸ்தலத்தைக் குறிவைத்துத் தாக்க ஆரம்பித்தது. ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த அந்தக் கூட்டத்தைப் பொலீசார் கண்ணீர்ப் புகை அடித்தும், எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடுகள் மூலமும் விரட்ட முற்பட்டனர். 

பொலீசாரால் பல இடங்களிலும் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் சிறீலங்கா அரசு இராணுவத்தை வீதிகளுக்கு அனுப்பியிருக்கிறது. மஹிந்த ராஜபக்சே குடும்பத்துடன் தங்கியிருந்த உத்தியோகபூர்வ பிரதமர் வாசஸ்தலத்திலிருந்து அவரைக் காப்பாற்றவும் இராணுவம் வந்திருந்தது. அக்குடும்பத்தினரைக் காப்பாற்றிப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றதாக இராணுவத்தினர் பின்னர் அறிவித்தனர்.

மக்கள் தொடர்ந்தும் ஜனாதிபதி கோட்டபாயா ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராடி வருகிறார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *