“நாட்டோ நாடுகள் எங்கள் பிராந்தியங்களைக் கைப்பற்றத் திட்டமிட்டிருந்தன,” புத்தின் வெற்றி தினத்தில் உரை.

இரண்டாம் உலகப் போரில் நாஸி ஜேர்மனியை நேச நாட்டுப் படைகள் ஒரு பக்கமாகவும் சோவியத்தின் இராணுவம் இன்னொரு பக்கமாகவும் தாக்கி வென்ற நாள் ரஷ்யாவில் பெரும் கோலாகலமாக வருடாவருடம் மே ஒன்பதாம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் முக்கியத்துவம் கொண்ட அந்த வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் ரஷ்யாவின் ஜனாதிபதி புத்தின் என்ன செய்தியை வெளிப்படுத்துவார் என்று உலகமெங்கும் எதிர்பார்க்கப்பட்டது. 

ரஷ்யாவில் திங்களன்று காலையில் நடந்த வெற்றி விழா ஊர்வலம் பல வகைகளிலும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 75 வது வருட ஞாபகார்த்த நாளான அதில் ஜனாதிபதி புத்தின் 11 நிமிடங்கள் உரையாற்றினார். உக்ரேன் மீதான போர் எத்தனை காலம் தொடரும் என்றோ அதன் குறி எதுவாக இருக்குமென்றோ புத்தின் பூடகமாகவும் எதையும் சொல்லவில்லை. 

“மேற்கு நாடுகளுக்குக் கடந்த ஆண்டு டிசம்பரில், பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த ஒப்பந்தத்தை நாங்கள் முன்மொழிந்தோம். இரண்டு பகுதியாரின் நலன்களையும் கருத்தில் கொண்டு நியாயமான சமரசங்கள், தீர்வுகளைக் காண்பதில் நேர்மையான உரையாடலுக்கு வருமாறு ரஷ்யா மேற்கு நாடுகளை வலியுறுத்தியது. நாட்டோ நாடுகள் எங்கள் பேச்சைக் கேட்க விரும்பவில்லை, அதாவது அவர்கள் உண்மையில் முற்றிலும் மாறுபட்ட திட்டங்களைக் கொண்டிருந்தனர். டொம்பாஸ், கிரிமியா உட்பட நமது நாட்டின் வரலாற்று முக்கியத்துவமான பகுதிகளில் படையெடுப்பு, ஏற்பாடுகள் அவர்கள் நடந்து வருகின்றன என்பது தெளிவாகத் தெரிந்தது,” என்று ரஷ்யாவைத் தாக்க மேற்கு நாடுகள் திட்டமிட்டிருந்ததாலேயே ரஷ்யாவின் பிரத்தியேக பாதுகாப்பு நடவடிக்கை அவசியமாகியது என்று அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

தனது ஆரம்ப காலக் குற்றச்சாட்டான, “நாஸிகளை அழித்து ஒழிக்கவேண்டியது சர்வதேச அளவில் போர் எழுவதைத் தடுக்கும் ரஷ்யாவின் நடவடிக்கை” என்பதைப் புத்தின் மீண்டும் வலியுறுத்தினார். அதனால், ரஷ்யாவின் எல்லைகளை நாஸிகளிடமிருந்து பாதுகாக்க ஒரு சர்வதேசச் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதே அவரது வாதமாக இருந்தது. 

“இரண்டாம் உலகப் போரின் படிப்பினைகளை யாரும் மறந்துவிடக் கூடாது. தாய்நாட்டிற்காக, அதன் எதிர்காலத்திற்காக நீங்கள் போராடுகிறீர்கள். திட்டமிட்டுக் கொலைகள் செய்பவர்களுக்கும்,  நாஸிக்களுக்கும் உலகில் இடமில்லை,” என்று இரண்டாம் உலகப் போரில் சோவியத்தின் செம்படையினரைத் தற்போது உக்ரேனில் போரில் ஈடுபடும் இராணுவத்தினருக்கு ஒப்பிட்டுக் குறிப்பிட்டார் புத்தின்.

புத்தினின் சுருக்கமான உரையில் உக்ரேன் என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. நடக்கும் போரில் ரஷ்யப் படைகள் வெற்றிபெறுகின்றனவா என்பதைப் பற்றியோ எத்தனை காலம் அது தொடரும் என்பது பற்றியோ குறிப்பிடுவது தவிர்க்கப்பட்டது. அவர் பேசிக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் உக்ரேனின் மரியபூல் நகரில் அஸோவ்ஸ்டோல் தொழிற்சாலை வளாகத்தில் உக்கிரமாகப் போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரஷ்யாவின் இராணுவத்தினரின் இழப்புக்கள் பற்றியும் குறிப்பிடவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *