ஜெனின் அகதிகள் முகாமில் வைத்து அல் – ஜஸீராவின் நீண்டகாலப் பத்திரிகையாளர் ஷிரீன் சுட்டுக் கொலை.

சுமார் கால் நூற்றாண்டாக அல் ஜஸீரா ஊடகத்தில் பணியாற்றிய ஷிரீன் அபு அக்லே புதனன்று சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். பாலஸ்தீன அதிகாரத்தின் பகுதியான ஜெனின் அகதிகள் முகாமில் பணியிலிருக்கும்போது அவரது முகத்தில் குண்டடிபட்டது.  அவரைச் சுட்டது பாலஸ்தீனர்களே என்று இஸ்ராயேல் அதிகாரம் முதலில் குறிப்பிட்டது. ஷெரினுக்குப் பக்கத்தில் அச்சமயத்தில் நின்ற பத்திரிகையாளர்கள் அக்குண்டு இஸ்ராயேலிய இராணுவத்தினுடையது என்று குறிப்பிடுகிறார்கள்.

 அல் ஜஸீரா நிறுவனம் குறிப்பிட்ட துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்திலான படத்தை வெளியிட்டிருக்கிறது. முதுகில் ஊடகத்துறை என்று எழுதியிருக்கும் நீலமும் வெள்ளையும் உடைக்கவசமணிந்திருக்கும் ஷிரீன் துப்பாக்கிச் சூடுகளுக்கு உள்ளாவதை அந்தப் படங்களில் காணமுடிகிறது. கூடவே இருந்த சக பத்திரிகையாளரான ஷத்தா ஹனாய்ஸா, “ஷரீன் சுடப்பட்டுக் கீழே விழுந்த பின்னரும் துப்பாக்கிச் சூடு தொடர்ந்துகொண்டே இருந்தது. எனவே எவரும் அவரருகில் போக முடியவில்லை,” என்கிறார். ஷரீன் பாலஸ்தீன – அமெரிக்கக் குடியுரிமை உள்ளவராகும்.

“இது ஒரு குறிவைக்கப்பட்ட கொலையாகும். சகலவிதமான சர்வதேச மனித உரிமைகளையும் மீறும் இந்த நடவடிக்கையை இஸ்ராயேலின் ஆக்கிரமிப்பு இராணுவம் செய்திருக்கிறது,” என்று அல் ஜஸீராவின் உத்தியோகபூர்வமான செய்தி குறிப்பிடுகிறது.

அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உட்பட சர்வதேச அளவில் ஷரீன் கொலையைக் கண்டித்து அறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன. இது பற்றிய ஆழமான, பாரபட்சமில்லாத விசாரணை நடாத்தப்பட்டுக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்று அமெரிக்கா கோரியிருக்கிறது. 

தமது பாகத்திலிருந்து இதுபற்றிய மிக விபரமான விசாரணை நடாத்தப்படும் என்று இஸ்ராயேல் குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன் பாலஸ்தீனர் அதிகாரத்துடன் சேர்ந்து தாம் விசாரணையில் ஈடுபட அழைப்பு விட்டிருக்கிறது. பாலஸ்தீனர்களோ சுட்ட குண்டு பற்றிய ஆராய்வுகள் முடியும்வரை அதை இஸ்ராயேல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கத் தயாரில்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *