சவூதி அரேபிய அரசின் கோல்ப் சுற்றில் விளையாட PGA சுற்று வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதுவரை எந்த கோல்ப் விளையாட்டுச் சுற்றுக்கோப்பையிலும் கொடுக்கப்படாத அளவு பெரிய தொகைப் பரிசுடன் சவூதி அராபிய அரசு அறிவித்த LIV Golf Invitational Series சுற்றுப்போட்டிக்குக் காலம் சரியில்லை. 25 மில்லியன் டொலர்களைப் பரிசுப் பெட்டகத்தில் கொண்டிருக்கும் சவூதி அரேபியாவின் கோல்ப் பந்தயம் ஜூன் 9 – 11 திகதி வரை பிரிட்டனில் நடைபெறவிருக்கிறது. மிகப் பெரிய அந்த பரிசுத் தொகையைக் குறியில் கொண்டு சர்வதேச கோல்ப் நட்சத்திரங்கள் சிலர் சவூதி அரேபியாவின் பந்தயங்களில் விளையாடத் தம்மை அனுமதிக்கும்படி PGA சுற்று கோல்ப் அதிகாரத்திடம் அனுமதி கேட்டிருந்தார்கள். அதைத் தாம் அனுமதிக்க முடியாது என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
“பிஜிஏ சுற்றுப் போட்டிகளின் விதிமுறைகளின்படி சவூதி அரேபியாவின் கோல்ப் பந்தயத்தில் விளையாட விண்ணப்பித்தவர்களுக்கு அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்று நாங்கள் அறிவித்துள்ளோம். எங்கள் விதிமுறைகளின் கீழ் சவுதி கோல்ஃப் சுற்றுப்பந்தயத்தில் லண்டன் நிகழ்வில் பங்கேற்க சுற்றுலா உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் இல்லை. ஒரு உறுப்பினர் அமைப்பாக, இந்த முடிவு PGA டூர் மற்றும் அதன் வீரர்களின் நலன்களுக்காக இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்,” என்ற பதில் கோல்ப் வீரர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
சவூதி அரேபியாவின் கோல்ப் சுற்றுப்பந்தயங்களின் நிர்வாகி கிரேக் நோர்மான் PGA சுற்று கோல்ப் அதிகாரத்தின் முடிவைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். PGA சுற்று கோல்ப் அதிகாரம் அவ்விளையாட்டின் வீரர்கள் தாம் எங்கே விளையாடுவது என்ற முடிவை எடுக்கும் சுதந்திரத்தை மறுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சவூதி அரேபியாவின் கோல்ப் பந்தயங்கள் நடாத்தப்பட இருக்கும் அதே சமயத்தில் வருடாவருடம் நடந்துவரும் Volvo Car Scandinavian Mixed கோல்ப் பந்தயப் போட்டி சுவீடனில் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்