எம்.பி.ஸட் எமிரேட்ஸ் ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றார்.
எமிரேட்ஸ் கூட்டரசின் ஜனாதிபதியாக இருந்த கலீபா பின் ஸாயத் அல் நஹ்யான் சில தினங்களுக்கு முன்னர் தனது 73 வயதில் மறைந்தார். அவருக்கு அடுத்ததாக இதுவரை பட்டத்து இளவரசராக இருந்த எம்.பி.ஸட் என்று பரவலாக அறியப்பட்ட முஹம்மது பின் ஸாயத் பின் நஹ்யான் சனியன்று ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
2014 ம் ஆண்டே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் கலீபா பின் ஸாயத் அல் நஹ்யான். அதன் மூலம் தனது ஆரோக்கியத்தில் பெரும் பலவீனத்தை அடைந்திருந்தார். அவரது பெயரில் அச்சமயம் முதலே முக்கியமான முடிவுகளை எடுத்து வந்தவர் அவரது ஒன்று விட்ட சகோதரரான எம்.பி.ஸட் ஆகும். அந்தக் குறுகிய காலத்தில் எமிரேட்ஸை ஒரு திறந்த நாடாக்கிச் சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நாடாகவும் பெரும் பணக்காரர்கள் வாழக் குடியேறும் நாடாகவும் மாற்றிவந்திருக்கிறார் எம்.பி.ஸட்.
ஏழு சிறிய நாடுகளைக் கொண்ட எமிரேட்ஸின் தலைநகராக அபுதாபி இருந்து வருகிறது. அவ்வேழு நாடுகளில் டுபாய் சர்வதேச வர்த்தக, சுற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது. சகல நாடுகளில் தலைவர்களும் ஒன்றிணைந்து தன்னை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததற்காக நன்றி தெரிவித்தார் எம்.பி.ஸட்.
பிரிட்டனில் உயர்கல்வியை முடித்த எம்.பி.ஸட் பட்டத்தரசனாக ஆகியது முதல் வளைகுடா நாடுகளில் எமிரேட்ஸைப் பல வழிகளிலும் ஒரு சர்வதேச அரசியலின் பிரதான புள்ளியாக்கியிருக்கிறார். அவரும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசனான முஹம்மது பின் சல்மானும் அரசியலில் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்