நூற்றுக்கணக்கான குண்டு வெடிப்பு எச்சரிக்கைகள் பெல்கிரேட்டை வைத்திருக்கின்றன.
செர்பியாவின் தலைநகரம் நூற்றுக்கணக்கான குண்டு வெடிப்பு எச்சரிக்கைகளால் ஸ்தம்பித்திருக்கிறது. ஆரம்பப் பாடசாலைகள், உணவகங்கள், பாலங்கள், நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள் போன்றவையில் குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கைகள் விடப்பட்டிருப்பதால் அவையெல்லாவற்றிலும் பொலீசாரால் தேடுதல்கள் நடத்தப்படுகின்றன. எச்சரிக்கைகள் ஒவ்வொன்றையும் கவனமெடுத்து அந்தந்த இடங்கள் மூடப்படுவதால் நகரில் போக்குவரத்து உட்பட சகலமும் நிலைகுலைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 90 இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல்களில் எவ்விதக் குண்டுகளும் கிடைக்கவில்லை. மின்னஞ்சல்கள் மூலம் வந்திருக்கும் குறிப்பிட்ட எச்சரிக்கைகள் எங்கிருந்து வந்தவை என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சுமார் 100 பாடசாலைகள், மிருகக்காட்சிசாலை, நகர விமான நிலையம், மக்டொனால்ட் உணவகம், கால்பந்தாட்ட மையம், நீர்வளக் காரியாலயம், ரஷ்யத் தூதுவராலயம் ஆகியவையும் குண்டுவெடிப்பு எச்சரிக்கைக்கு உள்ளாகியிருக்கின்றன.
நாட்டின் தேசிய விமானமான எயார் செர்பியாவின் ரஷ்யப் போக்குவரத்து கடந்த மாதங்களில் பல தடவைகள் குண்டுவெடிப்பு எச்சரிக்கைகளுக்கு மீண்டும், மீண்டும் உள்ளாகி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் செர்பியா மட்டுமே ரஷ்யாவுடனான விமானத் தொடர்பைத் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை போடாத ஒரு ஐரோப்பிய நாடு செர்பியாவாகும்.
“நாங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான போர்த்தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறோம். அத்தாக்குதல்கள் ஐரோப்பாவிலிருந்தே எம் மீது நடத்தப்படுகின்றன,” என்கிறார் செர்பிய உள்துறை அமைச்சர் அலெக்சாந்தர் வுலின்.
சாள்ஸ் ஜெ. போமன்