முள்ளிவாய்க்கால் எம் விடுதலைமுற்றம்

முள்ளிவாய்க்கால் தமிழரின்
மரபியல் எழுச்சிக்குறியீடு

அந்தமண் இன்னமும் சிவந்துதான் கிடக்கிறது…
ஆர்ப்பரித்த அலைகள் அங்கலாய்த்துத் தவிக்கிறது…
யாரழுதும் அடக்கமுடியாக் கண்ணீர்
ஆறாய்ச் சொரிகிறது…
அவனியில் அரிதாரம் பூசிய முகங்களால்
அழிந்து போனதெம் வாழ்வு!
அழிந்தது அழிந்துபோக
அணைப்பாரின்றிக்கிடக்கிறது எம் தேசம்!
யாரிடமும் சொல்லமுடியா, ஆற்றாமையின்
அங்கலாய்ப்பில் ஆண்டுகள் கரைந்தோடிவிட்டன…

எலும்பும், சதையும், பிண்டங்களுமாய்
விழுந்து மாண்ட இடத்தில் புல்பூண்டுகளாய்க்கூட
உங்களைக் கண்டெடுக்க முடியவில்லை…

தேடுவார் யாருமின்றி தெருவோரமாய் வழிநெடுகக் குருதிவழிந்தோடக் குற்றுயிராய்க்கிடந்தோரை எங்குமே தேடமுடியவில்லை!

அழுது குழற அங்கங்கள்
பேய் குதறச் சிதைந்துபோன
தங்கையரின் உடலங்களை!

மனம் மரத்து, சாக்காடுகளையே
தங்குமிடங்களாய்க் கொண்ட
வாழ்வின் சோதனைக் களங்களை,
மனிதம் மரித்து, மரணக்கணக்குகளை
மனப்பாடம் செய்துகொண்டு,
இது எம் விதிதானோ என்று
புலம்பித்திரிந்தருந்த அந்த
இருண்ட நாட்களை,

மரணத்தின் ஒத்திகை நினைவுகளை,
மானுடத்தின் பெருவலியை,
மனதிற்சுமக்கமுடியா
ஏக்கப்பெருமூச்சை,
ஆற்றாமைகளின் அழுகுரல்களால்
அங்கலாய்த்துக் கொண்ட
அக்கணப்பொழுதுகளை,
தோற்றுப்போய்விடுவோமோ யாம்
என்ற ஏக்கத் தரிசனங்களை,

இருப்பவர் யார், இறப்பவர்யார் என்ற எதுவித
அறிவித்தல்களும் இல்லாமலே,
இதயம் மரத்துப்போன இன்னல்வேளைகளை,
பிரிந்துபோன உறவுகளை, மீண்டும்
சந்திக்கமுடியாப்பெரும் துயர்வலிகளை,

வீழ்ந்தவர் எவரையும், புதைக்கவோ
எரிக்கவோ முடியாக் கனத்த மனதோடு கடந்துபோய்க்கொண்டிருந்த
இருண்ட தருணங்களை,
எவரது இறுதிப் பயணங்களிலும், ஒன்றாக நின்று,
விடையளிக்க முடியா இதயம் நொருங்கிய பொழுதுகளை,

எந்தக் காயங்களுக்கும் மருந்துகள் இல்லா உயிர்வலியை ,
எந்தச் சாவுகளுக்கும் சாட்சியம் இல்லாச் சம்பவங்களை,

தலைவனும் மக்களுமாய்க் களத்தில் நின்ற
கனதியான காலங்களை,

இவையனைத்தையும்,

முள்ளிவாய்க்கால் தந்ததெல்லாம் மரணப்பெருவலிதான்..

அடுத்தவேளை உணவுக்கென்ன வழியென்ற
ஏக்கத்தில்அலைந்த மனிதர்களை!

பசித்தவர் யார், பசியாற உணவளிப்பவர்
யாரென்ற ஏக்கத்தவிப்புகளை,

ஒட்டிய வயிற்றோடு உண்ணும் உணவுக்காய்ப்
பொட்டலங்கள்வரும் திசைநோக்கிக்
காத்திருந்த மானிடத்தை,
கட்டியங்கூறமுடியாக் கஞ்சியில்கூட
கால்வயிறு நிரப்பிக் காலங்கள் வெல்லக்
காத்திருந்த சோதனைகளை!

பற்றிப்பிடித்த வாழ்வியல் நிலையில்
பந்நத்தில் நின்ற உறவுகளை, மீண்டும்
ஒற்றை நிமிடமேனும் காணமாட்டோமா
என்ற ஏக்கப் பெருமூச்சை,
தனிமைகளை, தனிமையின் குமுறல்களை,
தலைவிதியென்றே நொந்துபோன
தருணங்களையெல்லாம்,

முள்ளிவாய்க்கால் தந்தது என்னவோ
மானப்பெருந்துயர்தான்..

ஆயினும்,

இதுவரையிலும் உணரமுடியாத
தேசத்துக் காவலர் தம் அருமையினை,
ஒருமுறையேனும் நினைந்துருகச்
செய்த அதியங்கள் நடந்தேறின,

பசிக்கு உணவில்லையேல் இருக்கும் உணவைப்
பலபேர்க்குப் பகிர்கின்ற பக்குவநிலை வந்தேறின,
கசியும் விழிநீரைக் துடைத்துக் கரைசேர்க்கும்
கண்ணியம் கண்டேகின ,

இதயம் நிறைந்த உறவுகளை மதிக்கத் தெரிந்த மார்க்கங்களறிந்து,
சதையும், பிண்டங்களும் கடந்து, உதயம்காணும்
உண்ணமையின் தரிசனங்களை உணரத்தொடங்கும்

புதியதோர் #விதிசெய்வோம்!.

எதையும் வெல்லும் திடம்தந்த
முள்ளிவாய்க்கால் என்ற சோதனைக்களம் மீண்ட
நெருப்புமனிதர்களாய் மீண்டும் பிறப்பெடுப்போம்…
இனியும் குனியோம், திடமாய் நிமிர்வோம்,
கூறுகள் போட்டுக் குறைபட்டுக்கொள்வதைத் தூர ஏறிவோம்,

நிறைகொண்ட வாழ்வை நிம்மதி வழிகண்டு
உறவுகள் பேணி உண்மைவழி நிற்போம்.
காற்று அதிலேறிக் காலம் வெல்வோம்,
நேற்றுக்கண்ட துயர் நிர்மூலம்கொள்வோம்,
வீழ்ந்த வழித்தடத்தில் விதையாய் மீண்டெழுவோம்,
விழ விழ எழுந்து விடுதலை காண்போம்!
முள்ளிவாய்க்கால்ப் பெருவலியை நிச்சயம் நாம் கடந்து,
சத்தியம் அதன்வழி சாதனை கண்டிடுவோம்!
விரைவினில் ஓன்றாய் விடுதலைமுற்றத்தில் சேர்ந்திடுவோம்!
விடுதலைப்பண்பாடி வீழ்ந்தவரை வணங்கிடுவோம்!

எழுதுவது: காந்தள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *