முயற்சியை மூச்சாக்கு…

பொய்வேடம் போடாமல் புல்லரென வாழாமல்
மெய்கொண்டு வாழ்வதே மேல்!

பழுதென்றே காணும் பதர்களை நீக்கி எழுதிடு வாழ்வின் இயல்!

எழுசீரில் வள்ளுவன் ஈந்த குறளோ பழுதினை நீக்கும் பகம்!

பொய்கொண்டே வாழ்கின்ற புல்லரினை வீழ்த்திட மெய்கொண்டே காண்பாய் மேல்!

பொய்வேடம் போட்டு புளுகியே வாழ்வோரை செய்திடுவாய் நீயே சிதள்!

சினமேற்றி சூடேற்று! சிந்தனையில் தீவை! மனம்கொதித்து சிக்கும் மடம்!

நல்லவற்றை எண்ணிடு! நற்கருத்தை ஊன்றிடு!
பல்லுயிரும் வாழ்ந்திடவே பாடு!

குறைகுடங்கள் கூத்தாடும்! குண்டியம் பேசும்!
நிறைகொண்டோர் நிற்பார் நிமிர்ந்து!

பதித்திடு உன்பெயரை! பாரில் படர்ந்து!
எதிர்கொள் எதிர்ப்பை எதிர்த்து!

இழிசொல் லுரைக்கும் இழிபிறவி தன்னை
கழிவென்றே தாண்டு கடிந்து!

நெறிகெட்ட வார்த்தையால் நெஞ்சில் நெருப்பை
எறிந்தோரை என்றும் எதிர்!

பெரிதிற்கும் மேலாய் பெரிதினை தேடல் சரித்திர மாகும் சதிர்!

அறிவில்லார் சொல்லும் அறிவுரை யாவும்
அறிவை அழிக்கும் அசும்பு!

போலிகளை வீழ்த்தும் புலவனாய் வாழ்ந்திடு! தூலியால் உண்மையைத் தூவு!

எதிர்ப்பென்று வந்தால் எதிர்கொண்டே நிற்பாய்!
கொதிப்புடன் செய்வாய் குறுக்கு!

தற்புகழ்ச்சி தம்பட்டம் தன்னலம் கொண்டோர்கள் அற்பரென நீயே அறி!

அடக்கமிலார் ஆக்கம் அழிந்திடும்! வாழ்வும் முடங்கிடும்! யாவர்க்கும் முன்!

நரியினும் பேயினும் நாயினும் கீழாம் அரிதார மாந்தர் அகம்!

பகையழித்தே வாழு! பலம்கொண்டே வாழு! வகையறிந்தே வாழ்வாங்கு வாழு!

முகமூடி கொண்டேதான் முத்தமிழை ஆள
விகற்பங்கள் கொள்ளும் விருப்பு!

பகையென்று வந்தபின் பாய்ந்திடு புலிபோல்! மிகையாகி நீயே மிளிர்!

முயற்சியை மூச்சாக்கு முன்னேற்றம் தோன்றும்! அயற்சியில் சோர்ந்தால் அழிம்பு!

முகவரி யற்ற முகமூடி மாந்தர் விகல்பத்தில் என்ன வியப்பு!

எழுதுவது: பாரதிசுகுமாரன்