வானத்தில் பறந்துகொண்டிருக்கும் பறவைகள் வெப்பநிலை தாங்காமல் இறந்து விழுகின்றன.
வடமேற்கு இந்தியாவில் ஆமதாபாத் பகுதியில் பறந்துகொண்டிருக்கும் பறவைகள் வீழ்ந்து இறப்பதாக விலங்கு நலன் பேணும் சங்கத்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம் ஏப்ரல் மாதத்திலிருந்தே அங்கு வெப்பநிலை தினசரி 40 பாகை செல்சியஸுக்கு அதிகமாக இருந்து வருகிறது. பெரும்பாலான நாட்கள் 46 – 48 பாகையை அவை தொடுகின்றன.
பறவைகள் வழக்கமாக நீர் அருந்தும் இயற்கையான நீர்நிலைகள் வற்றிவிட்டிருக்கின்றன. களைக்கும்போது நிழலில் ஒதுங்கப் பாவிக்கப்படும் மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. மனிதர்களைப் போல நீரைத் தேடிப் போய்ப் பெற்றுக்கொள்ள அவைகளால் முடியாததால் அவைகளின் உடல் நீரிழப்பால் பலவீனமாகிவிடுகின்றது. எனவே உடல் செயற்பாடு இழந்து தளர்ந்து அவை இறந்து கீழே விழுகின்றன.
வரட்சி மோசமாக இருக்கும் பகுதிகளில் சமீப வாரங்களில் பல்லாயிரக்கணக்கான சிறிய பறவைகள் நீரிழப்பால் பாதிக்கப்பட்டுப் பறந்துகொண்டிருக்கும்போதே தளம்பி விழுவதாக Jivdaya Charitable Trust என்ற விலங்குகள் நலம் பேணும் அமைப்பின் அங்கத்தவர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த வாரங்களில் தினசரி சுமார் 90 பறவைகளையாவது தமது அமைப்புப் பொறுப்பெடுத்துக் காப்பாற்ற வேண்டியிருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தமது விலங்குகளுக்கான மருத்துவ மனையில் பறவைகள் மட்டுமன்றி நீரிழப்பால் பாதிக்கப்பட்ட நாய்கள், குரங்குகள், பசுக்களும் மருத்துவ உதவி பெறுவதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள். சில பறவைகள் குடிப்பதற்கு நீர் கிடைத்தவுடன் உற்சாகம் பெற்றுவிடுகின்றன. விழுந்து காயமடைந்த, சிறகொடிந்தவைக்குப் பல வாரங்கள் மருத்துவ உதவி தேவைப்படுகின்றன.
காலநிலை மாற்றத்தின் விளைவாகக் கடுமையான கோடை இந்தியாவின் பல பகுதிகளையும் இவ்வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்தே ஒரே நேரத்தில் தாக்கியிருக்கின்றன. வானிலை அறிவிப்பு மையத்தின் எச்சரிக்கை இதேபோன்ற வெம்மை இம்மாதம் முழுவதும் தொடரும் என்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்