சர்வதேச தேயிலை தினமும் தோட்டத் தொழிலாளர்களும்
இன்று உலகில் ஐந்து பேரில் நான்கு பேராவது அன்றாடம் தேநீர் அருந்துபவர்களாக இருக்கிறார்கள். தரவுகளின்படி நாளாந்தம் 2 பில்லியன் மக்கள் தமது நாளைத் சுவையான ஒரு தேநீருடன்தான் தொடங்குகிறார்கள். என்று சொல்லப்படுகிறது. ஜப்பான் போன்ற நாடுகளில் தேநீர் அருந்துவதை ஒரு நிகழ்வாகவே கொண்டாடுவார்கள்.
இன்று உலகில் அதிக தேயிலையை உற்பத்தி செய்யும் நாடுகளில் நான்காம் இடத்தில் இருக்கும் இலங்கையில், 155 வருடங்களுக்கு முன்னர் தேயிலை அறிமுகம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தேயிலை இலங்கைக்குத் தொடர்ந்தும் வருமானம் ஈட்டித் தரும் ஒரு பயிராக இருக்கிறது. அதிலும் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் தேயிலையே இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தது என்றால் அது மிகையல்ல. கடந்த காலங்களில் சில பின்னடைவுகள் இருந்தாலும் இன்றும் இலங்கையில் தேயிலை முக்கிய ஏற்றுமதிப் பொருளாகவே இருக்கிறது.
எங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ளத் தினமும் தேநீரை ருசித்துப் பருகும் எங்களில் எத்தனை பேர் அந்த ஒரு கோப்பைத் தேநீர் எங்கு ஆரம்பித்து எப்படி எங்கள் கைகளுக்கு வந்து சேர்ந்தது என்று எண்ணிப் பார்த்திருக்கிறோம்? இன்றைய தினம் சர்வதேச தேயிலை தினமாகக் கொண்டாடப்படும் நேரத்தில் எமது கைகளில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் தொழிலாளர்களைப் பற்றி எண்ணிப் பார்த்திருக்கிறோம்?
தேயிலை உற்பத்தியைப் பொறுத்தவரையில் இந்தத் துறை மிக அதிகளவு தொழிலாளர்கள் தேவைப்படும் துறையாகக் காணப்படுகிறது. குறிப்பாகக் கொழுந்து பறிப்பதற்கு அதிகமான தொழிலாளர்கள் (70 வீதம்) தேவைப்படுகிறார்கள். தோட்டத் தொழிலாளர்கள் பரம்பரை பரம்பரையாக தேயிலைத் தோட்டங்களின் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் தம்மை அர்ப்பணித்தவர்களாக இருந்தாலும் அரசும் தோட்ட முதலாளிகளும் தொழிலாளர்கள் ஈட்டித் தரும் இலாபத்தின் பங்கை இன்றுவரை அந்தத் தொழிலாளர்களுக்கு கொடுத்ததில்லை.
விவசாயிகளின் கஷ்டத்தை விளக்க பட்டுக்கோட்டையார் “காடு விளைந்தென்ன மச்சான், நம் கையும் காலும்தானே மிச்சம்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால் தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை அந்தக் கையும் காலும் கூட மிச்சமாவதில்லை.
பொதுவாக தொழிற்சாலை போன்ற இடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வேலைத்தளப் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமையாகிறது. ஆனால் மலையகத்தில் பலமான தொழிற்சங்கங்கள் இருந்தும் தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் வேலைத்தளப் பாதுகாப்பு தொடர்பான காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் இன்றுவரை செய்யப்படவுமில்லை.
குறிப்பாக தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து எடுக்கும் பெண்களின் வேலைச் சூழல் வேறு எந்தத் துறையிலும் இருக்கும் பெண்களின் நிலையையும் விட மோசமானதாகவே இருக்கிறது. இவர்கள் வேலை செய்யும் சில மலைகள் சரிவு கூடியவையாக இருப்பதுடன், குளவி கொட்டுதல், பாம்பு கடித்தல், காட்டுப் பன்றியின் தாக்குதல், சிறுத்தையின் தாக்குதல், தினமும் இரத்தம் உருஞ்சும் அட்டைகள் என்பவற்றுக்கு முகம் கொடுத்தபடிதான் வேலை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
பெண் தொழிலாளர்கள் இந்த மலைச் சரிவுகளில் கால் சறுக்கி அடிபடுவதும் வழமையான ஒரு விடயமாகத்தான் இருக்கிறது. சிலர் ரப்பர் செருப்பு அணிந்தாலும் பெரும்பாலானவர்கள் வெறும் காலுடன்தான் வேலை செய்கிறார்கள். இதனால் வீதியோரங்களில் உள்ள கொழுந்துகளைப் பறிக்கும்போது கால்களை கண்ணாடிப் பீங்கான்கள் பதம் பார்ப்பதும் நடந்திருக்கிறது.
கொழுந்து மலைகளில் எப்படி கண்ணாடித் துண்டுகள் வந்தன என்று யோசிக்கிறீர்களா? மலையகப் பகுதிக்குச் சுற்றுலா செல்லும்போது வீதியோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு மது அருந்தியபடி இயற்கையை ரசிக்கும் சில மதிகெட்டவர்கள் குடித்து முடித்த பின்னர் வீசியெறிந்து உடைக்கும் மதுப்போத்தல்களின் துண்டுகள்தான் அவை.
அதுமட்டுமல்ல, சிலவேளைகளில் இந்தத் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் இடத்திற்குச் செல்லப் பல கிலோ மீட்டர் (Up and down 4 – 5 km) தூரம் நடக்க வேண்டியிருக்கும். திரும்ப வரும்போது தலையில் 25 – 30 kg நிறையுள்ள கொழுந்துகள் நிறைந்த கூடையையும் சுமந்தபடி நீண்டதூரம் நடக்க வேண்டியிருக்கும். மலைகளுக்கு கொழுந்து எடுக்கப்போனால் வீடு திரும்பும்வரை அவர்களுக்கு அங்கு எந்த மலசலகூட வசதிகளும் இருப்பதில்லை. மாதவிடாய் காலத்தில் அவர்களுக்கு ஓய்வும் இல்லை வேலைத்தளத்தில் எந்த வசதிகளும் வழங்கப்படுவதில்லை.
இதனை விடவும் சில தோட்டங்களில் கங்காணி உட்பட மேலதிகாரிகளின் வசவுகள், பாலியல் சீண்டல்கள், பாலியல் துஸ்பிரயோகங்கள் என்பவற்றையும் சகித்துக் கொண்டுதான் இவர்கள் வேலை செய்து குடும்பத்திற்காக உழைக்க வேண்டியிருக்கிறது.
இன்றுவரை தொடர்ந்தும் உழைப்புக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படாத தொழிலாளர் வர்க்கமாக இவர்கள் இருக்கிறார்கள். மாதச் சம்பளம், EPF, ETF போன்றவற்றைக் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காக கைக்காசுக்கு வேலைக்கு எடுக்கும் முறையும் சில தோட்ட நிர்வாகங்களால் பின்பற்றப்படுகிறது. இந்தச் சுரண்டல்களை பல சமூக ஆர்வலர்கள் வெளிக்கொண்டு வந்தாலும் இன்றுவரை தோட்ட நிர்வாகம் அவற்றையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.
தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை வேலைத்தளத்தில் ஏற்படும் விபத்து, மரணங்களுக்கும் முறையான நட்ட ஈடு வழங்கப்படுவதில்லை என்றும் அறிய முடிகிறது. குறிப்பாக மலையில் நடக்கும் விபத்து, மரணத்திற்கு சரியான நட்டஈடு கணித்தல் முறையும் நடைமுறையில் இல்லை.
இவைகளின் குடியிருப்புகள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் அதே நிலையில்தான் இருக்கிறது. மலசல கூட வசதிகளும் மோசமானதாகவே இருக்கிறது.
மலையகப் பெண்களின் நாட்கள் அதிகாலையில் எழுந்து வீட்டுக் கடமைகள் முடித்து காலை 6.30 மணிக்கு பெரட்டுக் களம் (Muster) செல்வதில் ஆரம்பித்து மாலை 5.30 க்கு பறித்த கொழுந்துகளை நிறுத்துப் பதிந்து வீடு திரும்பும்வரை நீள்வதாகவே இருக்கிறது. ஆனால் அவர்களின் கடமை அதனோடு முடிந்துவிடுவதில்லை. வேலை முடிந்து இரவு சமையலுக்குத் தேவையான விறகுகளையும் சேகரித்துக் கொண்டு வீடு சென்று பின் குடும்பத்தவர்களுக்கு உணவு தயாரிப்பதும் அவர்களின் பொறுப்பாகவே இருக்கிறது.
நல்ல வசதிகள் நிறைந்த கட்டடத்திற்குள் இருந்து வேலை செய்யும் நாங்களே நல்ல மழைநாள், கடும்பனியும் குளிரும் உள்ள நாள் என்றால் உடனே வேலைக்கு லீவு போட்டுவிட்டுத் வீட்டில் இருந்து விடுவோம். ஆனால் இவர்களால் அப்படிச் செய்துவிட முடியாது. மழையோ, குளிரோ அல்லது கடும் வெய்யிலோ அவர்கள் வேலைக்குச் சென்றுதான் ஆகவேண்டும். ஒவ்வொரு நாளும் குறித்த அளவு கொழுந்து பறித்துத்தான் ஆகவேண்டும்.
ஒரு கிலோ கொழுந்து பறிக்க சராசரியாக 1500 கொழுந்துகள் உடைக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் ஒரு நாளைக்கு 15 kg கொழுந்து எடுக்க வேண்டுமென்றால் ஒரு பெண் தொழிலாளர் 22,500 தடவைகள் கொழுந்துகளை பறிக்க வேண்டும். சராசரியாக ஒருநாளில் 30 kg கொழுந்து எடுக்கும் பெண் அதன் இரண்டு மடங்கு தடவைகள் அதாவது 45,000 தடவைகள் தேயிலைக் கொழுந்துகளை பறித்தல் வேண்டும்.
உங்களில் எத்தனைபேர் கொழுந்து எடுக்கும் பெண்களின் விரல்களைப் பார்த்திருக்கிறீர்கள்? ஒரு முப்பது வயதுடைய கொழுந்தெடுக்கும் பெண்ணின் விரல் நுனிகள் கரடுமுரடானதாகவும் வெடிப்புகளோடும் இருப்பது சர்வசாதாரணம். தினமும் வெய்யிலிலும் மழையிலும் கடினமான சூழலிலும் வேலை செய்வதாலும், போசாக்கான உணவு கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு என்பதாலும் இவர்களில் பலர் இளம் வயதிலேயே பல வருடங்கள் மூப்படைந்தவர்களின் தோற்றத்தைப் பெற்றுவிடுகிறார்கள்.
இதனைவிட இவர்கள் வாழும், வேலை செய்யும் சூழலில் உள்ள காரணிகளால், போசாக்கு குறைவான உணவு போன்ற காரணங்களால் குருதிச் சோகை, சுவாச நோய்கள், சர்க்கரை வியாதி போன்ற வியாதிகளாலும் துன்பப்படுகிறார்கள். வைத்திய சாலைக்கு சென்றால் ஒருநாள் சம்பளம், போனஸ் என்பன கிடக்காதென்பதால் வைத்திய சாலைக்குச் செல்வதில் தயக்கம் காட்டுவதும் இங்கு வழக்கமான ஒரு விடயம்.
இப்படி நோய்களோடும் இயற்கையின் காலநிலை மாற்றங்களோடும் காட்டு விலங்குகளோடும் தோட்ட நிர்வாகம் மற்றும் அரசோடும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு சமுதாயமாக இருக்க வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலையில்தான் இந்த சமூகம் இருக்கிறது. அதனால்தானோ என்னவே, தோட்டத் தொழிலாளர்களின் இரத்தம் கலந்திருப்பதாலேயே தேநீர் சிவப்பாக இருக்கிறது என்று ஒரு விரக்தி கலந்து வேடிக்கையாகச் சொல்லுவார்கள்.
ஐ.நாவின் அங்கீகாரத்துடன் மூன்றாவது வருடமாக மே மாதம் 21 ம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச தேயிலை தினத்தின் கருப்பொருள் “Tea and Fair Trade” ஆக அமைந்துள்ளது. சர்வதேச அளவில் தேயிலைக்கான பொருளாதாரப் பெறுமதியை அதிகரித்தல், தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்பவர்களின் வறுமை நிலையை இல்லாது ஒழித்தல், பாதுகாப்பான பணிச் சூழலை ஏற்படுத்துதல் ஊடாக தொழிலாளர்களின் நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துதல் ஆகும். ஆனால் தேயிலையின் உற்பத்தி, விற்பனை மட்டுமே தொழிலாளர்களின் வறுமையை ஒழித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தி விடாது. அதற்கு தோட்ட நிர்வாகமும் அரசும் நியாயமான சம்பளம் வழங்குவதோடு, பெண் தலைமைத்துவ மேம்பாடு, சமூக பொருளாதார, கல்வி, சுகாதார அபிவிருத்தியிலும் போதிய கவனம் செலுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பல இலாபநோக்கற்ற சேவை அமைப்புகளே இவற்றில் சில விடயங்களிலாவது கவனம் செலுத்தி தமது பங்களிப்பை வழங்கி வருகின்றன. அரசு மற்றும் தோட்ட நிர்வாகங்களின் பங்களிப்பு மிக மந்தமானதாகவே இருக்கிறது.
அடுத்தமுறை உங்கள் தேநீர்க் கோப்பையை கையில் எடுக்கும்போது அதன் பின்னால் உள்ள தொழிலாளர்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். முடிந்தால் அவர்களின் சமூக, கல்வி, பொருளாதார வளர்ச்சிக்காக பணியாற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகளூடாக உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்
எழுதுவது : வீமன் , கனடா