இனிதே நிறைவேறிய இலண்டன் தமிழ் நிலைய மாலை

இலண்டனில் ’தமிழ் நிலைய மாலை’
இலண்டனில் இயங்கி வரும் தனித்துவமான பாடசாலைகளில் ஒன்றான இலண்டன் தமிழ் நிலையப் பாடசாலையின் வருடாந்த ‘தமிழ் நிலைய மாலை’ நிகழ்வு 07.04.2024 அன்று   watersmeet theatre அரங்கில் இனிதே நிறைவேறியது.


மிகக் கச்சிதமான திட்டமிடலுடன் ஆரம்பமாகி நிகழ்வுகள் யாவும் தரமானதாக அமைந்து சபையோரை இரசிக்க வைத்தன. மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து பாடசாலைக் கீதம் இசைத்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தது பாராட்டுதற்குரியதாகும்.

வாத்தியக்கதம்பம், வாய்ப்பாட்டு, மிருதங்கம், வயலின், புல்லாங்குழல், சுரத்தட்டு, பரதநாட்டியம், கவிதாநிகழ்வு ஆகிய நிகழ்வுகள் பாடசாலை ஆசிரியர்களின் கடுமையான உழைப்புடன் மேடையேறின.


வீணை ஆசிரியைகளான ஸ்ரீமதி சிவதாரணி சகாதேவன், செல்வி ஜெசிக்கா நித்தியானந்தா, வாய்ப்பாட்டு ஆசிரியைகளான ஸ்ரீமதி சயனி தியாகநாதன், ஸ்ரீமதி ஜெயந்தி சுரேஸ், ஸ்ரீமதி திலகசக்தி ஆராவமுதன், மிருதங்க ஆசிரியர்களான ஸ்ரீ கிருபாகரன் பரமசாமி, ஸ்ரீ பார்த்தீபன் செல்வரட்ணம், வயலின் ஆசிரியையான ஸ்ரீமதி கௌசல்யா சத்தியலிங்கம், புல்லாங்குழல் ஆசிரியரான ஸ்ரீ ஜனகன் ஸ்ரீஸ்கந்தராஜா, சுரத்தட்டு ஆசிரியர்களான ஸ்ரீ ரெஜித்தன் சிவனேசன், ஸ்ரீ நிருஜன் சிவனேசன், பரதநாட்டிய ஆசிரியைகளான ஸ்ரீமதி திரிவேணி சங்கரகுமார், ஸ்ரீமதி பிரசாந்தி உதயபாபு ஆகியோரின் பங்களிப்பு மெச்சுதற்குரியதாகும்.

மாணவர்கள் வழங்கிய தெய்வீக இசையும் நடனமும் பாடசாலையின் தரத்தையும் உயர்த்தியனவாக இருந்தன. நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பாடசாலை ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் பக்கவாத்தியக் கலைஞர்களாக விளங்கி ஒத்துழைப்பு வழங்கியமையும் மிகச் சிறப்பான அம்சமாக விளங்கியது.


கலாக்ஷேத்திராவில் கல்வி கற்ற ஆசிரியைகளால் கற்பிக்கப்படும் பரதநாட்டிய நிகழ்ச்சி எப்போதும் இலண்டன் தமிழ்ப் பாடசாலையில் தனித்துவமுடையதாக அமைந்திருக்கும். இம்முறையும் சீத்தா கல்யாணம் பொம்மலாட்ட நடன அமைப்பில் சிறுவர்களால் திறன்பட ஆடப்பட்டது. தொடர்ந்து சிரேக்ஷ்ட மணவர்களது பரதநாட்டியமும், அவர்களது நளினமும் அடவு முத்திரைகளும் சுத்தமானதாக இருந்து சபையைக் கவர்ந்தன. வாய்ப்பாட்டு ஆசிரியை ஸ்ரீமதி ஜெயந்தி சுரேஸின் வாய்ப்பாட்டு நிறைவு நிகழ்ச்சியாக அமைந்து நல்லதொரு மனவுணர்வைத் தந்தது.


தமிழ் மொழியின் புகழைச் சொல்லும் வகையில் ’சித்திரம் பேசுதடி’ கவிதா நிகழ்வு நகைச்சுவையுடன் சிந்திக்க வைத்ததாகவும் விளங்கியது. இதற்கான பிரதியை பாடசாலையின் பெற்றோரான கவிஞர் சு. திருப்பரங்குன்றன் எழுதியமையும் குறிப்பித்தக்க விடயமாகும்.

தமிழ் ஆசிரியைகளான ஸ்ரீமதி காஞ்சனா புவனேந்திரன், ஸ்ரீமதி ராதா நவனீதநாதன், ஸ்ரீமதி அகல்யா நித்தியலிங்கம், ஸ்ரீமதி மாதவி சிவலீலன் ஆகியோர் இதனை நெறிப்படுதியிருந்தனர்.


தலைமையாசிரியரான ஸ்ரீமதி மாதவி சிவலீலன் தனது உரையில் நுண்கலை ஆசிரியர்கள் இந்த வருடம் நவராத்திரி விழா, தியாகராஜ உற்சவம், தமிழ் நிலைய மாலை ஆகிய நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பாக நடாத்திப் பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளமையைக் குறிப்பிட்டு சிரந்தாழ்த்தி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அத்துடன் பாடசாலையின் முன்னைய தலைமை ஆசிரியர்களான கலாநிதி இ. நித்தியானந்தன், வைத்திய கலாநிதி வி. அனந்தசயனன் ஆகியோர் வருகை தந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு உறுதுணை நிற்பதனையும் , அறங்காவல் சபையினரையும் பாடசாலை நிர்வாகத்தினரையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.நன்றியுரையினை செல்வி சித்தவி சபேசன் வழங்கினார். கலாநிதி பிரசாந்தி ஜெயராஜன் அனைத்து நிகழ்ச்சிகளையும் அழகாகத் தொகுத்து வழங்கினார்.

நிகழ்வுக்கு இளைஞர்களான சாள்ஸ், நிருக்ஷன், கரன் ஆகியோர் ஒலியமைப்பைத் திறன்படச் செய்து உதவியிருந்தனர். மேடை ஒழுங்கமைப்பை திரு தி. திருமாறன், கலாநிதி சபேசன், ஸ்ரீமதி சிவாஜினி கிருக்ஷ்ணகுமார், ஸ்ரீமதி சிவாஜினி ஜெயந்தன், ஸ்ரீ எஸ். ஜனார்த்தனன் , ஸ்ரீமதி நளாயினி சாந்தகுமார் ஆகியோரும் உணவுச்சாலையை ஸ்ரீ ஜெயந்தன் குழுவினரும் பொறுப்பேற்றுக் கொண்டமையால் நிகழ்வுகள் துரிதமாகவும் ஒழுங்காகவும் நடை பெறப் பெரிதும் காரணமாக அமைந்தன. விழாவுக்கான மலரினை ஸ்ரீ எஸ் ஜனார்த்தனன் அச்சிட்டு அனுசரணை வழங்கினார். மாணவர்கள், பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணைந்த இந்நிகழ்வு பெரு வெற்றியை அன்று கண்டிருந்தமை சபையோர் மத்தியில் மகிழ்ச்சியைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *