என்றுமில்லாத அளவு சுயேச்சைகள் ஆஸ்ரேலியாவின் தேர்தலில் வெற்றி பெற்றனர்!
ஆஸ்ரேலியாவின் ஆளும் கட்சியாக இருந்த பழமை பேணும், லிபரல் கட்சியினர் தோற்றது மட்டுமில்லாமல் நாட்டில் புதியதொரு அரசியல் நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது நடந்த தேர்தல். பதவியிழந்த ஆளும் கட்சியின் முக்கிய தலைகளுட்படப் பலரும் நாட்டில் வெவ்வேறு பாகங்களில் சுயேச்சையாக நின்ற வேட்பாளர்களுடன் தோற்றுப் போயிருக்கிறார்கள்.
வென்ற சுயேச்சைகள் எல்லோருமே இதுவரை பெண்கள். அதைத் தவிர அவர்களெவருக்கும் ஒரே விதமான அரசியல் கோட்பாடு இல்லை. வெற்றி பெற்றுப் பிரதமராகக் போகும் அந்தோனி அல்பனீசின் தொழிலாளர் கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே அவர் எட்டுத் திசைகளையும் நோக்கி நிற்கும் சுயேச்சை வேட்பாளர்களுடன் பேரம் பேசுவதன் மூலமே நாட்டை ஆளமுடியும்.
அரசியலில் பேரம் பேசுவதில் விற்பன்னர் என்ற பெயரெடுத்த அல்பனீஸ் பிரதமராகுவது ஏற்பட்டிருக்கும் நிலைமையை இலாவகமாகச் சமாளிக்கக்கூடியவர் என்று அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள். 2008 – 2013 காலகட்டத்தில் அவரது கட்சி ஆட்சியிலிருந்தபோது அல்பனீஸ் பெற்றிருந்த மந்திரிப்பதவியானது “பாராளுமன்றத்தில் பேரம்பேசுதல்” என்பதாகவே இருந்தது. நாட்டின் வெவ்வேறு மாநிலங்களின் விருப்பங்களைக் கேட்டறிந்து அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் மந்திரியாக அவர் இருந்தார். 2010 இல் அக்கட்சி சிறுபான்மை அரசையே கொண்டிருந்தது. அச்சமயத்தில் ஆட்சி கவிழாமல் இருக்கப் பலரையும் ஒருமுகப்படுத்தியவர் என்று பாராட்டப்பட்டவர் அல்பனீஸ்.
“எங்களுடையே இருக்கும் ஒரே விதமான நோக்கங்களைக் குறியாக நோக்கி நாம் நகர்ந்தால் வெவ்வேறு கோட்பாடுகளைக் கொண்டவர்களும் ஒற்றுமையாக அவ்விடயங்களில் பங்குபற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன். இதுவரை பிளவுபாடுகளையே முக்கியமாக நோக்கி நடந்த ஆட்சியில் மக்கள் நம்பிக்கையிழந்துவிட்டார்கள். எனவே வெவ்வேறு எண்ணங்களுடன் தேர்தலில் நின்று வென்றவர்களை ஒருமுகப்படுத்து நாட்டை ஆள என்னால் முடியும்,” என்று தனது வெற்றிக்கு நன்றி நவிலும்போது அல்பனீஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
தேர்தல் முடிவுகள் முழுமையாக வராத நிலையில் நாட்டின் தலைவர் ஜப்பானில் நடக்கவிருக்கும் உயர்மட்ட மாநாடு ஒன்றில் ஜப்பான், இந்தியப் பிரதமர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனையும் செவ்வாயன்று சந்திக்கவேண்டியிருக்கிறது. அந்தப் பேச்சுவார்த்தைகளில் அந்தோனி அல்பனீஸ் ஆஸ்ரேலியாவின் தற்காலிகப் பிரதமராகவே பங்குபற்றுவார் என்று கருதப்படுகிறது.
சுமார் 70 % வாக்குகள் எண்ணப்பட்டிருக்கும் நிலையில் தொழிலாளர் கட்சிக்கு 72 இடங்களே கிடைத்திருக்கின்றன. பெரும்பான்மை அரசொன்றை அமைப்பதானால் பாராளுமன்றத்தில் 76 இடங்களை வெற்றியெடுக்க வேண்டும்.
சாள்ஸ் ஜெ. போமன்