சிரியாவுக்குள், துருக்கியின் எல்லையையிலிருந்து 30 கி.மீற்றர்களைக் கைப்பற்ற எர்டகான் உத்தேசம்.
குர்தீஷ் இனத்தவரின் இயக்கங்கள் துருக்கிக்குள் தலையெடுக்க விடாமல் செய்வதில் குறியாக இருக்கிறார் ஜனாதிபதி எர்டகான். சிரியாவுக்குள் செயற்படும் அப்படியான இயக்கங்கள் தமது நாட்டின் பிராந்தியத்துக்குள் ஊடுருவதைத் தடுக்க துருக்கி – சிரிய எல்லையையடுத்து சிரியாவுக்குள் 30 கி.மீ தூரம் வரை கைப்பற்றி ஒரு பாதுகாப்பு வலயத்தை உண்டாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
எர்டகான் பல தடவைகளும், அமெரிக்காவுடனும், ஐரோப்பிய ஒன்றியத்துடனும் ஒன்றுபடாமல் இருப்பது அவ்விடயத்தில் தான். சிரியாவில் பரவிய ஐ.எஸ் இயக்கத்தையும் மற்றைய தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்களையும் எதிர்கொள்ள அமெரிக்காவும், ஐரோப்பாவும் குர்தீஷ் இயக்கங்களுக்கு ஆதரவையும், ஆயுதங்களையும் கொடுத்து வந்தன. தொடர்ந்தும் ஆதரவளிக்கின்றன.
துருக்கி இந்த எண்ணத்தை முன்னரும் பல தடவைகள் தெரிவித்து நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. அதனால் துருக்கி தனது சக நாட்டோ அங்கத்துவ நாடுகள் சிரியாவில் தனது எதிர்த்தரப்பினராகக் காணவேண்டியிருந்தது. அமெரிக்காவுடன் அவ்விடயத்தில் முரணாக இருந்து வரும் துருக்கியின் இராணுவம் பல சந்தர்ப்பங்களில் சிரியாவில் நேரடியாக மோதாமல் தவிர்க்கவேண்டிய சந்தர்ப்பங்களுக்கு உள்ளாகியதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
தனது இராணுவம் சிரியாவுக்குள் அனுப்பப்பட இருப்பதாகத் தெரிவித்த எர்டகான் அதன் மேலதிகள் விபரங்கள் வரவிருக்கும் நாட்களில் வெளியிடப்படும் என்கிறார்.
இன்னொரு பக்கத்தில் எர்டகான் நாட்டோ அமைப்பில் சேர விண்ணப்பித்திருக்கும் சுவீடன், பின்லாந்து ஆகியவற்றுக்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார். அதற்கான காரணமாக அவர் குறிப்பிட்டிருப்பது அந்த நாடுகள் குர்தீஷ் விடுதலை அமைப்புக்கள் தமது நாடுகளில் இயங்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள் என்பதாகும். எர்டகானின் உண்மையான நோக்கம் தான் குர்தீஷ் விடுதலை இயக்கங்களுக்கு எதிர்காக நடத்திவரும் போர்களை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்பதேயாகும் என்று அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்