ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் குவாசுலு நதால் பிராந்தியத்தில் மழை, வெள்ளப்பெருக்கு.

தொடர்ந்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தென்னாபிரிக்காவின் குவாசுலு நதால் மாகாணத்தை மீண்டும் தாக்கியிருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்னர் அதே பிராந்தியத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அழிவு சுமார் 400 பேரின் உயிரைக் குடிந்திருந்தது சர்வதேச ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தது. அதே டர்பன் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே மீண்டும் இந்த இயற்கை அனர்த்தம் ஏற்பட்டிருக்கிறது.

பெரும் வெள்ளத்தையடுத்து தென்னாபிரிக்காவில் தேசிய பேரழிவு நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. – வெற்றிநடை (vetrinadai.com)

சுமார் 4 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட டர்பன் நகரைச் சுற்றியுள்ள பிராந்தியத்தின் போக்குவரத்து வழிகள், கட்டடங்கள், பாலங்களை வெள்ளப்பெருக்கு தாக்கி அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்தும் வெள்ளம் பரவிக்கொண்டிருப்பதால் முழு விபரங்களும் தெரியாத நிலையில் இருப்பதாக மீட்புப் பணியினரின் அதிகாரம் குறிப்பிட்டிருக்கிறது. சில பகுதிகளைச் சுற்றி வெள்ளம் ஆக்கிரமித்திருப்பதால் அவை தீவுகளாகி அங்கே மீட்புப் படையினர் நுழைய முடியவில்லை. 

சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான கடற்கரைப் பகுதியான உம்துலொத்தியின் வீதியொன்றின் பெரும்பாகம் நீரால் அள்ளப்பட்டு விட்டதால் வாகனங்கள் அரைகுறையாகத் தொங்கிக்கொண்டிருப்பதாகச் சமூகவலைத்தளத்தில் வெளியான படங்கள் காட்டுகின்றன. தென்னாபிரிக்காவின் அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 82 தற்காலிக மையங்களைத் திறந்திருப்பதாகத் தெரிவித்தது. 

சனிக்கிழமையே நிலைமை மோசமாகி விட்டாலும் ஞாயிற்றுக்கிழமை வரை பல பகுதிகளை நெருங்கமுடியவில்லை. திங்களன்று வானிலையில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்றாலும் மழை சில பகுதிகளில் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *