“பிரதமர் ஜோன்சனும் சகாக்களும் கொரோனாக்கட்டுப்பாடுகளை முழுசாக அலட்சியப்படுத்தினார்கள்,” விசாரணை அறிக்கை.
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சனும் அவரது சக அமைச்சர்களும் நாடு முழுவதற்கும் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளை அறிவித்துவிட்டுத் தமது பங்குக்கு அவற்றை முழுசாக அலட்சியப்படுத்தியதாகக் குறிப்பிடுகிறது வெளிவந்திருக்கும் “பார்ட்டிகேட்” அறிக்கை. அறிக்கையின் பின்னர், ‘அந்தச் சந்திப்புக்கள் மிக நீண்ட நேரத்துக்குத் தொடர்ந்தன, அவைகளில் விதிகள் மீறப்பட்டன,’ என்பதை முழுசாக ஏற்றுக்கொண்ட ஜோன்சன் தானோ, தனது அமைச்சரவையோ பதவி விலகப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.
டௌனிங் ஸ்டிரீட் 10 இல் கொரோனாப் பரவல் சமயத்தில் நடந்த குடிவகைகள், கும்மாளத்துடனான விருந்துகள் பற்றிய விபரங்கள் வெளிவந்த காலமுதல் கோரியது போலவே மீண்டும் எதிர்க்கட்சிகளான லேபர், லிபரல் டெமொகிரடிக் கட்சியினர் மற்றும் ஸ்கொட்லாந்தின் எஸ்.என்.பி ஆகியவை ஜோன்சனைப் பதவி விலகும்படி கோரியதுடன் அவரது கட்சியினர் தமது தலைவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் கூச்சலிட்டனர்.
சூ கிரே என்ற அதிகாரியால் பார்ட்டிகேட் சம்பவங்கள் பற்றி விபரமாக ஆராய்ந்து வெளியாகியிருக்கும் குறிப்பிட்ட அறிக்கையானது, “விதிகளை மீறுவதற்கான காரணம் ஆளும்கட்சி உயர்மட்டத்தினரிடையே நீண்ட காலமாகவே உருவாகித் தொடரும் விதிமுறைகளைத் துச்சமாக மதிக்கும் கலாச்சாரமே,” என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. அந்த விசாரணை அறிக்கையானது நடவடிக்கைகள் எதையும் எடுப்பது பற்றிக் குறிப்பிடும் அதிகாரமுள்ளதல்ல.
தாம் செய்த தவறுகள் வெளியானதன் மூலம் தனது குணாதிசயத்தில், ‘அடக்க ஒடுக்கம் வந்திருப்பதாகவும், தவறுகளுக்குச் சரியான பாடம் கற்றுக்கொண்டிருப்பதாகவும்,” போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டார். குறிப்பிட்ட விருந்துகள் பற்றிய விபரங்கள் வெளியாக ஆரம்பித்த காலத்தில் பல தடவைகள் பிரதமர் ஜோன்சன் தான் எவ்வித கட்டுப்பாடுகளையும் மீறவில்லை என்று குறிப்பிட்டு வந்திருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்