மீண்டும் பிரதமராகுவாரா அவர்? என்ற கேள்வியைத் தனது கடைசி உரை மூலம் கிளப்பியிருக்கிறார் ஜோன்சன்.

ஐக்கிய ராச்சியத்தின் கொன்சர்வடிவ் கட்சியின் அடுத்த பிரதமராகப் போகிறவர் யார் என்று கட்சியின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்து செப்டெம்பர் 5 ம் திகதி தெரிவிப்பார்கள். ரிஷி சுனாக், லிஸ் டுருஸ் ஆகிய இருவரிலொருவர் அப்பதவியைக் கைப்பற்றலாம் என்று கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். அதே பிற்பகலில் பாராளுமன்றத்தில் தனது உரையை “Hasta la vista, baby” என்று முடித்து மீண்டும் பிரதமர் பதவியைக் குறிவைப்பாரா போரிஸ் ஜோன்சன்? என்ற கேள்வியை அரசியல் வட்டாரத்தில் குண்டாக விட்டெறிந்திருக்கிறார் அவர். 

“ 40 ஆண்டுகளில் மிகப்பெரிய டோரி பெரும்பான்மையை வெல்ல உதவியது என் வாழ்க்கையில் எனக்குச் சாதிக்கக் கிடைத்த பெரும் பாக்கியம். நாம் எமது ஜனநாயகத்தை அடிமட்டத்திலிருந்து மாற்றியமைத்து, எமது நாட்டின் முடிவுகளை நாமே எடுக்கும் சுதந்திரத்தை மீண்டும் பெற்றுவிட்டிருக்கிறோம். பெரும் தொற்றிலிருந்து இந்த நாட்டைக் காப்பாற்றிய நான் இன்னொரு நாட்டை அழிவிலிருந்து காப்பாற்ற உதவியிருக்கிறேன். எனது குறிக்கோள்களைப் பெருமளவில் நிறைவேற்றியிருக்கிறேன்,” என்று தனது கடைசி உரையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட ஜோன்சன் “ – Hasta la vista, baby, நன்றி,” என்று கூறி விடைபெற்றார்.

– Hasta la vista, baby என்ற கூற்றானது டெர்மினேட்டர் என்ற சினிமாவில் பிரபல நடிகர், அரசியல்வாதி ஆர்னால்ட் ஷ்வார்ட்ஸ்னெக்கரால் குறிப்பிடப்பட்டுப் பிரபலமானது. அதன் அர்த்தம் விடைபெறுவது மட்டுமன்றி, “மீண்டும் வருவேன்,” என்பதுமாகும்.

வரவிருக்கும் பிரதம மந்திரியின் ஆட்சியின் பின்னர் மீண்டும் அரசியலில் தீவிரமாகக் குதித்துப் பிரதமர் பதவியைக் கைப்பற்ற விரும்புகிறாரா போரிஸ் ஜோன்சன் என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள், அரசியல் அவதானிகள் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் ஒப்பிடப்படும் ஜோன்சன் ஜனாதிபதி பதவியில் மீண்டும் கண் வைத்திருக்கும் டிரம்ப் போலவே பிரிட்டிஷ் பிரதமராகலாம் என்று சிலர் குறிப்பிடுகிறார்கள்.

பிரிட்டிஷ் அரசியலில் 1800 களில் பிரதமராக இருந்த வில்லியம் கிளாஸ்டோன் நான்கு வெவ்வேறு தடவைகள் பிரதமராகியிருக்கிறார். அதையடுத்து 1970 களில் அதைச் செய்தவர் ஹரால்ட் வில்சன். அவர் 1964, 1970, 1974, 1976 ஆகிய தவணைகளில் பிரதமராகியவர்.

சாள்ஸ் ஜெ. போமன்   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *