விளாடிவொஸ்டொக் நகரசபை கூடியபோது போரை நிறுத்தக் கோரிய நகரசபைப் பிரதிநிதிகள்.
உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை நடாத்திவரும் ரஷ்யாவின் இராணுவம் சமீப நாட்களில் டொம்பாஸ் பகுதியை வெவ்வேறு முனைகளிலிருந்து தாக்கிவருகிறது. ரஷ்யாவெங்கும் போருக்கெதிரான கருத்துக்களைப் பகிரங்கமாக உச்சரிப்பது சட்டத்துக்கு எதிரானதென்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் சமயத்தில் நாட்டின் நகரசபையொன்று கூடியபோது உக்ரேன் ஆக்கிரமிப்பு நிறுத்தப்படவேண்டும், உக்ரேனில் மேலும் பல குழந்தைகள் அனாதைகளாக்கப்படலாகாது என்ற அறிக்கையொன்றை நகரசபை உறுப்பினரொருவர் வாசித்தார்.
கொம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான லியனோட் வசுக்கெவிட்ச் என்பவரே நகரசபை கூடியபோது தைரியமாக எழுந்துப் போர் நிறுத்தப்படவேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்தவராகும். அவர் நகரசபையில் மேலும் நான்கு உறுப்பினர்கள் தனது பிரேரணைக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார். வசுக்கெவிட்ச் எழுந்து பிரேரணையை வாசிக்கும்போதே நகரசபை ஆளுனர் அதை நிறுத்த முயன்றபோதும் வசுக்கெவிட்ச் தனது கருத்தை முழுவதுமாகச் சொல்லிவிட்டே அமர்ந்தார்.
போருக்கெதிராகக் குரலெழுப்பிய உறுப்பினர்கள் இனிமேல் நகரசபையில் பேச அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஆளுனர் குறிப்பிட்டார். ரஷ்யாவில் போருக்கெதிரான குரல்களைப் பகிரங்கமாக எழுப்பமுடியாவிட்டாலும் நாட்டின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகலும், சுவரில் வரையப்படும் கிறுக்கல்களும் அச்செய்தியைக் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் தமது உடையில் வெள்ளைப் பூவைச் சுமந்துகொண்டும் தமது கருத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்