உக்ரேனிலிருக்கும் ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபை, தமது உறவை ரஷ்யத் திருச்சபையிலிருந்து வெட்டிக்கொண்டது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று உக்ரேனிலிருக்கும் ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபையின் மேற்றிராணியார்கள் சந்திப்பு நடந்தது. அங்கே ரஷ்யாவின் ஓர்த்தடொக்ஸ் திருச்சபை இனிமேல் தமது தலைமைப்பீடம் அல்ல என்றும் தாம் தனியான ஒரு திருச்சபையாகச் செயல்படவிருப்பதாகவும் முடிவு எடுக்கப்பட்டது. அதன் காரணம் ரஷ்யாவிலிருக்கும் ஓர்த்தடொக்ஸ் திருச்சபைத் தலைமை உக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் போருக்கு ஆதரவை நல்கி வருவதாகும்.
மற்றைய உலக நாடுகளிலிருக்கும் ஓர்த்தடொக்ஸ் திருச்சபையினர் ரஷ்யத் தலைமை நடத்திவரும் போரைக் கண்டித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றன. ரஷ்யாவின் அத்திருச்சபையின் தலைவர் கிரில் தனது முழு ஆதரவை புத்தினுடைய போருக்கு வழங்கி வருவதால் அதே திருச்சபையின் பகுதியாக இருந்துவந்த உக்ரேன் ஓர்த்தடொக்ஸ் தலைமை மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படன.
கியவிலிருக்கும் ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் தலைவரான ஒனுவிரிய் பல தடவைகள் புத்தினுடன் தொடர்பு கொண்டு போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டிருந்தார். ஏனெனில் அவர்களின் திருச்சபை ரஷ்யத் திருச்சபையின் ஒரு பாகமாக இருக்கும்வரை ரஷ்ய ஜனாதிபதியே அவர்களின் பாதுகாவலராகும். புத்தின் அவற்றை அலட்சியப்படுத்தியதால் உக்ரேன் – ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபையின் அதி மேற்றாணியார் ஒனுபிரிய் தனது சக மேற்றிராணியார்களுடன் கூடித் தமது நாட்டிலிருக்கும் திருச்சபையை சுயமான முடிவுகள் எடுக்கும் திருச்சபை என்று பிரகடனம் செய்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்