உக்ரேனில் ரஷ்ய இராணுவத்தினர் திட்டமிட்டுக் குழுக் கற்பழிப்புகளில் ஈடுபட்டதாகப் பொய் சொல்லப்பட்டது.
உக்ரேனின் மனித உரிமைக் கண்காணிப்பாளராக இருந்த லுட்மில்லா டெனிசோவாவும், மனோவியல் மருத்துவர் ஒலெக்சாந்திரா கிவிட்கோவும் நாட்டுக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவத்தினர் அங்கே குழுக் கற்பழிப்புகளில் ஈடுபட்டிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர். அவை பொய்கள் என்று தற்போது வெளியாகியிருக்கிறது.
லுட்மில்லாவும், ஒலெக்சாந்திராவும் பல கற்பழிப்புகளில் ரஷ்ய இராணுவத்தினர் ஈடுபட்டதாகப் பல விபரங்களை வெளியிட்டிருந்தனர். அவைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரென்பதை அவர்கள் வெளியிடவில்லை. அதற்கான காரணம் அப்பெண்களின் அடையாளத்தை வெளியே வராமல் பாதுகாப்பதே என்று சொல்லிவந்தார்கள். அவ்விபரங்கள் சர்வதேச ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகி உலகை அதிரவைத்தனர்.
லுட்மில்லாவும், ஒலெக்சாந்திராவும் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாதவர்கள் அவர்களுடைய விபரங்கள் தனித்தனியானவை என்று பல ஊடகங்களும் குறிப்பிட்டு அவர்களை நேரல்காணல் செய்திருந்தன. ஆனால், அவர்களிருவரும் தாயும் மகளும் என்பதும் அவர்களுடைய விபரங்களுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று பின்னர் விசாரித்த உக்ரேனிய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
லுட்மில்லா, ஒலெக்சாந்திரா ஆகியோர் இருவரும் அவர்கள் மீதான சந்தேகங்கள் வெளியாகியவுடனேயே தத்தம் பதவிகளிலிருந்து தூக்கியெறியப்பட்டார்கள். உக்ரேன் அரசு அவர்களிருவரின் மீதும் விசாரணைகள் நடத்தி வருகின்றது. அவர்களின் பொய்கள் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட உக்ரேன் பெண்கள் மீதும் சந்தேகங்களை எழுப்புகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்