சுமார் 25 % அமெரிக்கர்கள் தமது அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போருக்குத் தயார்.
Chicago’s Institute of Politics என்ற அமைப்பால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்றின்படி நாலிலொரு அமெரிக்க வாக்காளர்கள் தமது அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதப் போர் நடத்தத் தயாராக இருக்கிறார்கள். “விரைவில் அரசாங்கத்துக்கு எதிராக ஏற்படும் போரில் ஈடுபடுவோம்,” என்று குறிப்பிடும் அவர்கள் தமது அரசாங்கம் தம்மிடமிருந்து மிகவும் அன்னியமாகிவிட்டதாகக் கருதுகிறார்கள்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி கடைசியாக நடந்த தேர்தலில் தான் தோற்கவில்லை என்று குறிப்பிட்டு அந்த முடிவை மாற்றத் தனது ஆதரவாளர்களை ஒன்றுபட்டுப் போராடத் தூண்டியிருந்தார். அவர்கள் அமெரிக்கப் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து அங்கே கலவரம் நடத்தியதுக்கும், டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய விசாரணைகள் நடந்து வருகின்றன. அதையடுத்தே இந்தக் கருத்துக் கணிப்பீடு நடத்தப்பட்டது.
“அமெரிக்க அரசாங்கம் சாதாரண மனிதர்களுக்கு எதிராகச் செயற்படும் ஒரு லஞ்ச ஊழல் கூட்டத்தால் இயக்கப்படுகிறது,” என்பதையே பெரும்பாலான அமெரிக்கர்கள் நம்புகிறார்கள் என்பதையே இந்தக் கருத்துக் கணிப்பீடுகள் காட்டுவதாக தெ கார்டியன் தினசரி எழுதியிருக்கிறது.
சகல கட்சி வாக்காளர்களிடையேயும் 56 % பேர் “நாட்டின் தேர்தல் ஒழுங்கான முறையில் நடத்தப்பட்டு, வாக்குகள் எண்ணுதல் சரியாகவே நடக்கிறது,” என்று நம்புகிறார்கள். ஆனால் அதே கூற்றுக்கு ரிப்பப்ளிகன் கட்சியினரிடையே 33 % நம்பிக்கையே இருக்கிறது. டெமொகிரடிக் கட்சியினரில் 80 % அக்கூற்றை ஆதரிக்கிறார்கள். கட்சிச் சார்பில்லாதவர்களில் 51 % பேர் அதை ஒத்துக்கொள்கிறார்கள்.
28 % அமெரிக்க வாக்காளர்கள் தாம் விரைவில் நாட்டின் அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதங்களை எடுத்துப் போராடவேண்டும் என்று நம்புகிறார்கள். அவர்களில் மூன்றிலொரு பங்கினர் வீட்டில் ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்.
இந்தக் கருத்துக்கணிப்பீடு அமெரிக்கச் சமூகத்திலிருக்கும் பலமான பிளவைக் காட்டுகிறது. பங்குகொண்டவர்களில் பாதிப்பேர் தாம் சக நண்பர்கள், உறவினர்களுடன் அரசியல் விவாதங்களில் இறங்குவதைத் தவிர்த்து வருவதாகவும் அதற்கான காரணம் அவர்களின் அரசியல் நிலைப்பாடு தமக்கு எதிரானதாக இருக்குமோ என்று பயப்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்