ஞாயிறன்று கொப்பன்ஹேகன் பல்பொருள் அங்காடித் துப்பாக்கித் தாக்குதலில் மூவர் இறப்பு.
டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்ஹேகனில் ஞாயிறன்று Fields என்ற பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கிச்சூடுகளின் விளைவாக மூவர் உயிரிழந்ததாக டனிஷ் பொலீசார் குறிப்பிட்டனர். அதுபற்றிய பத்திரிகையாளர் சந்திப்பில் சோரன் தோமாசன் வெளியிட்ட விபரங்களின்படி மேலும் மூவர் காயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொப்பன்ஹேகன் விமான நிலையத்துக்கு அருகே இருக்கும் அந்தப் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடுகள் நடந்ததை அடுத்து பெருமளவு பொலீசார் அங்கே அனுப்பப்பட்டார்கள். 22 வயதான டனிஷ்காரன் ஒருவன் கைது செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட பொலீசார் அவன் பற்றிய மேலதிக விபரங்கள் தெரியாது என்றும் அத்தாக்குதலின் பின்னணி தீவிரவாதமாக இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்தார்கள்.
பல நூற்றுக்கணக்கானோர் துப்பாக்கிச்சூடுகள் நடந்த சமயத்தில் அந்தப் பல்பொருள் அங்காடிக்குள் இருந்தனர். அதில் பலர் பிள்ளைகளுடன் ஆன குடும்பத்தினர். சூடுகள் நடந்ததை அடுத்து அவர்களிடையே ஏற்பட்ட பீதியில் பலர் மாடிகளுக்கிடையேயான படிகளில் விழுந்தடித்துத் தப்பியோட முற்பட்டு விழுந்தார்கள் என்று சாட்சிகள் குறிப்பிடுகின்றன. வேகமாக அங்கே வந்த பொலீசார் அவரவரை அந்தந்த மாடிகளிலேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டும் பலர் அங்கிருந்து வெளியேறவே முயற்சித்தனர்.
சாள்ஸ் ஜெ. போமன்