மழைவெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கான சிட்னிவாழ் மக்கள் வீடிழந்தனர்.
ஆஸ்ரேலியாவின் அரசு நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் வாழும் பல்லாயிரக்கணக்கானோரைத் தமது வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குப் போகும்படி கேட்டிருக்கிறது. காரணம் பல நாட்களாக அப்பிராந்தியத்தில் பெய்த மழையால் நீர் நிலைகள் நிறைந்து பெரும் வெள்ள அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 18 மாதங்களில் சிட்னி பிராந்தியத்தில் பெய்யும் மழையால் ஏற்பட்டிருக்கும் நான்காவது பெருவெள்ளம் இதுவாகும். “இது நகரகத்திலிருந்து வந்திருக்கும் அழிவு மழை,” என்கிறார் சிட்னி நகரின் ஆளுனர் டொனி பிளேஸ்டேல். நான்கு வெள்ளங்களிலும் மோசமானது தற்போதையதே. சுமார் 32,000 வீடுகளில் வாழ்பவர்கள் அங்கிருந்து வெளியேறவோ, வீடுகளை முற்றாகக் கைவிடவோ வேண்டிய நிலைமை உண்டாகியிருக்கிறது.
ஹாக் ஸ்பெர்க் நதி, நேபியன் நதி ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதியில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. பல மில்லியன் லிட்டர் நீர் நிறைந்துவிட்ட நதிகளின் அணைக்கட்டுக்களின் மேலாக வெளியே பாய்ந்துகொண்டிருக்கிறது. சிட்னிக்கு நீர்வசதியளிக்கும் அணைக்கட்டும் அவற்றில் ஒன்றாகும்.
சிட்னி நகரத்தின் மக்கள் தொகை அதிகரித்து நகரம் பெருமளவில் பரந்துகொண்டிருப்பதும் இந்த வெள்ள நிலைமைக்கு முக்கிய காரணம் என்று குறிப்பிடப்படுகிறது. பல கட்டடங்களினால் இயற்கையாகப் பாய்ந்து சென்று வடியும் நீர் தடுத்து வைக்கப்படுகிறது. மனிதர்களை மட்டுமன்றி பல குதிரைகளையும் சிட்னி நகரின் மீட்ப்புப் படையினர் காப்பாற்றி வருகிறார்கள். நகரின் வளர்ச்சியானது மீட்புப் பணிகளுக்கும் இடைஞ்சலாக இருப்பதாக ஆளுனர் குறிப்பிடுகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்