இன்று தனது இரண்டு நாள் சவூதிய விஜயத்தை ஆரம்பிக்கவிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி.
2021 இல் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளியன்று சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யவிருக்கிறார். தனது உரைகளில் பல தடவைகள் கடுமையாக சவூதி அரேபியாவின் அரசியலையும் அதன் அரச குடும்பத்தினரையும் விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதியின் இந்த விஜயம் பற்றி அவரது கட்சிக்குள்ளேயே முழு ஆதரவு இல்லை. சர்ச்சைக்குரிய இந்த விஜயம் சவூதி அரேபியா பற்றியது மட்டுமல்ல மற்றும் பல நிகழ்கால விடயங்களையும் பற்றியது என்று குறிப்பிட்டுத் தனது நிலைப்பாட்டு மாற்றத்தை விளக்க முயன்றிருக்கிறார் ஜோ பைடன்.
தனது விஜயத்தில் ஏற்கனவே இஸ்ராயேலில் இறங்கி அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் நத்தான்யாஹு ஆகியோரை ஜோ பைடன் சந்தித்தார். பிரதமர் யாய்ர் லப்பிட்டுடன் நடந்த பேச்சுவார்த்தையின் பின்னர், “ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்க அனுமதிப்பதில்லை,” என்ற உறுதிகூறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பிராந்தியத்திலிருக்கும் அராபிய நாடுகளுடன் இஸ்ராயேல் நெருங்குவதற்கு உதவுதாகவும் ஜோ பைடன் உறுதியளித்தார்.
இன்றைய சவூதிய விஜயத்தின் மூலம் இஸ்ராயேலிலிருந்து நேரடியாக சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யும் முதலாவது அமெரிக்க ஜனாதிபதியாகிறார் ஜோ பைடன். அது இஸ்ராயேலை இதுவரை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளாத சவூதி அரேபியாவுடன் அரசியலில் நெருங்குவதற்கு வாய்ப்பளிக்கும் என்பதை அடையாளப்படுத்துவதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டார்.
சுமார் 80 ஆண்டுகளாக அமெரிக்காவின் அரசியல், பொருளாதார நட்பு நாடாக சவூதி அரேபியா இருந்ததாகச் சுட்டிக்காட்டியிருந்தார் ஜோ பைடன். அமெரிக்காவில் படு வேகமாக உயர்ந்துவரும் எரிபொருள் விலையேற்றம், அதனால் அரை நூற்றாண்டு காணாத அளவுக்கு நாட்டில் உண்டாகியிருக்கும் பணவீக்கம் ஆகியவையே ஜோ பைடன் முதல் தடவையாக சவூதிய அரசனையும், பட்டத்து இளவரசனையும் சந்திக்கும் நிலைமையை உண்டாக்கியிருப்பதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள். தனது எண்ணெய் உற்பத்தியைக் கணிசமாக உயர்த்தும்படி சவூதிய அரேபியாவை வேண்டிக்கொள்வதன் மூலம் சர்வதேச எரி நெய் விலையுயர்வை எதிர்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது.
அத்துடன் மத்திய கிழக்கில் சீனாவின் அரசியல் ஊடுருவலை முறியடிக்கவும், உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் சவூதி அரேபியாவின் ஆதரவை நாடவும் இந்தச் சந்திப்பு பாவிக்கப்படும். இஸ்ராயேலைப் போலவே ஈரானைத் தனது ஜென்ம விரோதியாகக் கருதும் நாடு சவூதி அரேபியா. ஈரான் தனது பங்குக்கு அணு ஆயுதத்தைத் தயாரிக்க அனுமதிகலாகாது என்ற விடயத்தில் அமெரிக்காவுடன் ஒத்த கருத்துள்ள நாடாகும். சவூதி அரேபியாவைப் பிராந்திய அரசியலில் இஸ்ராயேலுடன் நெருங்கும்படி ஊக்கமளித்து அதன் மூலம் ஈரான் தனது பலத்தை அதிகரித்துக்கொள்ள முடியாமல் செய்வதும் அமெரிக்காவின் நோக்காகும்.
சாள்ஸ் ஜெ. போமன்