செர்பிய ஜனாதிபதியின் விஜயமொன்றை கிரவேசியா தடுத்ததால் இரு நாடுகளுக்குமிடையே அதிருப்தி.
யூகோஸ்லாவியக் குடியரசுக்குள்ளிருந்த நாடுகளிடயே போர்கள் உண்டாகி அவை தனித்தனியாகப் பிரிந்த காலத்திலிருந்தே அவர்களுக்குள் நல்லுறவு தானாக உண்டாகவில்லை. கிரவேசியாவுக்கும், செர்பியாவுக்கும் இடையேயான உறவுகளும் அதேபோலவே இருந்து வருகின்றன. சமீபத்தில் ஏற்பட்ட சம்பவமொன்று அவர்களுக்கிடையேயான கசப்புகளுக்கு மீண்டும் ஊட்டமளித்திருக்கின்றது.
கிரவேசியாவிலிருக்கும் இரண்டாம் உலகப் போர்க் காலச் சித்திரவதை முகாமுக்கு [Jasenovac] விஜயம் செய்யவிருந்த செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச்சைத் தடுத்து நிறுத்தியது கிரவேசிய அரசு. அதற்கான காரணமாக, ‘குறிப்பிட்ட விஜயம் பற்றி வெளியார்கள் மூலமாகவே கிரவேசியா அறிந்துகொண்டது. ஒரு ஜனாதிபதியின் விஜயம் என்பது உத்தியோகபூர்வமானது, பாதுகாப்பு வரையறைகளை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். விஜயங்கள் எது சம்பந்தப்பட்டவை என்பதை இரண்டு நாடுகளுக்குள்ளேயும் கலந்தாலோசித்த பின்னரே அவை நடக்கவேண்டும்,’ என்று விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் காலத்தில் கிரவேசியா, நாஸி படைகளுடன் கூட்டுறவாக இருந்து பல போர்க்காலக் குற்றங்களைச் செய்தது. Jasenovac லிருக்கும் சித்திரவதை முகாம் கிரவேசியாவின் களங்கமான சரித்திரத்தை வெளிப்படுத்துவதால் அது அந்த நாட்டின் ஒரு பலவீவனமான புள்ளியாகும். அங்கே கிரவேசியாவின் நாஸி- ஆதரவு அதிகாரிகளால் பல்லாயிரக்கணக்கான கிரவேசிய செர்பர்கள், யூதர்கள், ரோமா இனத்தவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.
செர்பிய ஜனாதிபதியின் விஜயத்தைத் தடை செய்தமை அந்த நாட்டின் பிரதமராலும் மற்றைய அமைச்சர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. பதிலடியாக “இனிமேல் கிரவேசிய அதிகாரிகள் எங்கள் நாட்டுக்கு விஜயம் செய்வதானால் அவர்கள் உத்தியோகபூர்வமாக அதை அறிவித்து அனுமதி பெறவேண்டும்,” என்றும் செர்பியா அறிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்