ஒன்றிய நாடுகள் எரிவாயுப் பாவனையை அதிவேகமாக 15 % ஆல் குறைக்கவேண்டும்!
2023 இலைதுளிர் காலத்தின் முன்னரே ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் தமது எரிவாயுப் பாவனையை 15 % ஆல் குறைக்கவேண்டும் என்று கோரியிருக்கிறது ஒன்றியத்தின் அமைச்சரவை. குடும்பங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பொது அதிகாரங்கள் அதை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
ரஷ்யா தனது எரிவாயுவை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் பரிபாலனத்துக்காக என்று குறிப்பிடப்பட்டுத் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் ரஷ்யாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான எரிவாயுக்குளாய் நிரந்தரமாகவே மூடப்படும் சாத்தியமிருப்பதாக ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொண்டர் லேயொன் தெரிவித்திருக்கிறார்.
தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சரவையால் செயற்படுத்தப்பட வேண்டிய ஒரு திட்டமாகக் கோரப்பட்டிருக்கும் இந்த நகர்வானது நிலைமை மோசமாகும் பட்சத்தில் கட்டாயமான நடவடிக்கையாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ராஜதந்திரிகள் வெள்ளியன்று சந்தித்து நாடுகளின் எரிவாயுப் பாவனையை வேகமாகக் குறைக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று வடிவமைக்க இருக்கிறார்கள். அவை ஜூலை 26 ம் திகதியன்று நடக்கவிருக்கும் ஒன்றியத்தின் எரிசக்தி அமைச்சர்கள் மாநாட்டில் தீர்மானமாக எடுக்கப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்