முஸ்லீம்களைத் தவிர எவரும் நுழைய முடியாத மெக்காவுக்குள் நுழைந்தார் யூதப் பத்திரிகையாளர்.
கடந்த வாரத்தில் இஸ்ராயேலிலிருந்து சவூதி அரேபியாவுக்கு பயணித்திருந்த ஜோ பைடனுடன் தொடர மூன்று இஸ்ராயேல் பத்திரிகையாளர்களுக்குப் பிரத்தியேக அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர் ஜில் தமறி என்பவர். அங்கே சென்ற அவர் முஸ்லீம்களுக்கு மட்டுமே அனுமதியுள்ள மெக்காவுக்குள் புகுந்து படங்களை எடுத்துத் தான் பணியாற்றும் சானல் 13 இல் வெளியிட்டிருக்கிறார்.
மற்றைய தெய்வங்களை வழிபடுகிறவர்கள் மெக்காவின் பிரதான பள்ளிவாசலுக்குள் நெருங்க அனுமதியில்லை என்று குரான் வசனமொன்றில் குறிப்பிட்டிருப்பதே சவூதி அரேபியாவில் சட்டமாக இருக்கிறது.
தனது படங்களையும் மெக்கா விஜயம் பற்றிய விபரங்களையும் வெளியிட்ட தமறி தான் வேண்டுமென்றே அந்த நகருக்குள் நுழையவில்லை என்கிறார். தான் ஒரு முஸ்லீமல்ல என்று அறியாத வாகனச் சாரதி தன்னை அந்த நகருக்குள் கொண்டு சென்றதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தமறியின் மெக்கா விஜயம் பற்றிய அறிக்கையானது இஸ்லாமிய நாடுகளிலும், சமூகவலைத்தளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதை அனுமதித்ததற்காக அவரது சானல் 13 ம், இஸ்ராயேலும் கண்டிக்கப்படுகின்றன. யூதர்களும், முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களும் கூட இதற்கு ஈடான செயலாக முஸ்லீம்கள் யாராவது யூதர்களின் புனித தலத்துக்குள் நுழைந்திருந்தால் அது எப்படி எதிர்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இஸ்ராயேலின் பிராந்தியக் கூட்டுறவு அமைச்சரான எஸாவி பிரய் இதுபற்றிக் கூறுகையில், இஸ்ராயேலும், அராபிய நாடுகளும் நெருங்கி வரவேண்டும் என்ற அமெரிக்க அரசின் முயற்சிகளுக்கும் தமறியின் நடவடிக்கை ஒரு இடைஞ்சலாகியிருப்பதாகத் தெரிவித்தார். [எஸாவி பிரய் ஒரு முஸ்லீம்.] இஸ்ராயேல் சமூகத்திலும் தமறி கடுமையாக விமசிக்கப்படுகிறார்.
தனது நடத்தைக்காக தமறி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அவர் தான் ஒரு நல்ல, தரமான நிகழ்ச்சியொன்றைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வத்திலேயே இதைச் செய்ததாகக் குறிப்பிடுகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்