எல்லைகளைச் சுற்றுலாப்பயணிகளுக்குத் திறக்கவிருக்கும் பூட்டான் அறவிடவிருக்கும் கட்டணம்.
கொரோனாத்தொற்றுக்களைக் கட்டுக்குள் கொண்டுவரத் தனது நாட்டின் எல்லைகளைச் சுற்றுலாப் பயணிகளுக்கு மூடிவைத்திருந்த நாடுகளில் பூட்டானும் ஒன்று. அந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு செப்டெம்பர் 23 ம் திகதி முதல் நாட்டினுள் மீண்டும் சுற்றுலாப்பயணிகள் வரவேற்கப்படுகிறார்கள் என்று அறிவித்திருக்கிறது பூட்டான். அதே சமயம் நிலையான வளர்ச்சி பேணும் கட்டணம் ]sustainable development fee] என்ற பெயரில் கணிசமான ஒரு கட்டணத்தையும் அறிவித்திருக்கிறது பூட்டான்.
சர்வதேசப் பயணிகள் பூட்டானுக்குள் செலவழிக்கும் நாளொன்றுக்கு 200 – 250 டொலர்கள் கட்டணம் செலுத்தவேண்டும். அதிகமான பயணிகள் வரும் மார்ச் – மே, செப்டெம்பர், நவம்பர் மாதங்களில் 250 டொலர்களாக இருக்கும் கட்டணம் மற்றைய மாதங்களில் தினசரி 200 டொலர்கள். இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு நாட்டவர்களுக்கு அது தினசரி 1,200 இந்திய ரூபாய்களாகும். இத்தொகைகள் ஒருவரின் மற்றைய நாளாந்த பூட்டான் செலவுகளுக்கு மேலாகப் போடப்பட்டதல்ல. நாட்டுக்குள் தங்கும், பிரயாணிக்கும், உணவு, நீர் அருந்தும் செலவுகள், சுற்றுலா வழிகாட்டி, உள்ளூர் வரிகள், பங்குபற்றும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றுக்கும் சேர்த்தே அந்தத் தொகை அறவிடப்படுகிறது. சமீபத்தில் வெனிஸ் நகர் தனது சூழலைப் பேணும் செலவு, சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் செலவு ஆகியவற்றுக்காக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது போலவே பூட்டானின் கட்டணமும் ஒப்பிடப்படலாம்.
பூட்டான் சர்வதேச ரீதியில் சுற்றுலாப் பயணிகளிடையே பெரிதும் விரும்பப்படும் நாடு. கொவிட் கட்டுப்பாடுகளால் பயணிகள் தொகை கணிசமாகக் குறைந்திருக்கிறது. அதை அதிகரிக்கும் அதே சமயம் நாட்டின் சூழல், காலநிலைப் பாதிப்பு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டே பூட்டான் உலகின் மிக அதிகமான சுற்றுலாப்பயணிகள் கட்டணத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்தியாவுடன் நெருங்கிய கூட்டுறவை வைத்திருக்கும் நாடு பூட்டான். விசா இன்றியே இந்தியர்கள் பூட்டானுக்குள் நுழையலாம். அங்கே சுற்றுலாப்பயணம் செய்பவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்களே. எனவே இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டணம் பற்றி இந்தியர்களிடையே முகச்சுழிப்பு தெரிகிறது. பதிலுக்குப் பூட்டான் குடிமக்கள் இந்தியாவுக்குள் நுழைவதற்கும் கட்டணமொன்றைப் போடலாமா என்றும் இந்தியா யோசிப்பதாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்