வெனிஸ் நகருக்கு வரும் ஒரு நாள் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஜனவரி 16 ம் திகதி முதல் இத்தாலியின் வெனிஸ் நகருக்குச் செல்லும் ஒரு நாள் பயணிகள் பிரத்தியேக கட்டணமொன்றைச் செலுத்தவேண்டும். பயணிகள் அங்கே செல்வதற்காக விண்ணப்பிக்கும்போதே அந்தக் கட்டணத்தைச் செலுத்தவேண்டும். சுற்றுலாப்பயணிகள் வருவதை வருடத்தின் சகல காலங்களிலும் பரவலாக இருக்கச் செய்யவும், நகரின் குப்பைகளை அகற்றும் செலவுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

“வெனிஸுக்குச் செல்லும் பயணிகளில் 80 விகிதமானோர் ஒரேயொரு நாளைத்தான் அங்கே கழிக்கிறார்கள். இரவில் அங்கே தங்குவதில்லை. வருடத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பெரும்பாலானோர் அந்த நகரை முற்றுகையிடுவதால் நகரின் சூழல் பெரிதும் அழுத்தத்துக்கு உள்ளாகிறது.” என்கிறார் நகரின் சுற்றுலா நிர்வாகியான சிமோன் வெந்துரினி.

1980 களில் சுமார் 10 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை வரவேற்ற வெனிஸ் 2010 இன் பின்னர் சுமார் 20 – 30 மில்லியன் பயணிகளை வருடாந்தரம் எதிர்கொள்கிறது. அவர்களில் பெரும்பாலானோர் மிகப்பெரிய கப்பல்களில் வருவதால் நீரினருகில் இருக்கும் அந்த நகரின் நிலமட்டமும் பெரும் அழுத்ததுக்கு உள்ளாகிறது.  

வெனிசுக்குள் நுழைய வருடத்தின் வெவ்வேறு சமயங்களில் கட்டணம் 3 – 10 எவ்ரோவாக இருக்கும். கட்டத் தவறுபவர்களுக்கான தண்டப்பணம் 300 எவ்ரோவாக இருக்கும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *