காலநிலை மாற்றத்தைத் தடுக்க அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கும் நெதர்லாந்து விவசாயிகள்.

பூமியின் காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்த நெதர்லாந்து அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளால் நாட்டின் விவசாயிகள் கோபமடைந்திருக்கிறார்கள். கடந்த பல நாட்களாக நடந்துவரும் அவர்களுடைய போராட்டங்கள் வன்முறையாகலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பொலீசாரை அவர்கள் தாக்கியதால் விவசாயிகளின் வாகனமொன்றை நோக்கி பொலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

விவசாய நடத்தையால் வெளியேறும் நைட்ரஜன் வாயுவைக் குறைக்க அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பல விவசாயிகள் தமது தொழிலை நிறுத்து நிலைமையை உருவாக்கலாம். அதற்குப் பொறுப்பான அமைச்சர் அரசு அளவுக்கதிகமான நைட்ரஜனை வெளிவிடும் விவசாய நிலங்கள் கட்டாயமாக நிறுத்தப்பட்டு அவற்றை அரசு கைப்பற்றும் என்று குறிப்பிட்டதால் விவசாயிகள் கொதித்துப்போயிருக்கிறார்கள். போக்குவரத்து, விமானப்பயணம் ஆகியவற்றை விடத் தாம் கடுமையாகக் கையாளப்பட்டுத் தமது வாழ்வாதாரம் ஒடுக்கப்படுவதாகக் குறிப்பிடுகிறார்கள் விவசாயிகள்.  

முக்கிய வீதிகளை விவசாய வாகனங்களால் மறித்தல், நெடுஞ்சாலைகளில் வைக்கோலைக் கட்டுகளாகப் போட்டு எரித்தல், De Dam சதுக்கத்தை முற்றுகையிடல் ஆகியவை விவசாயிகளால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளாகும். 

புதனன்று பொலீசாரின் வாகனங்களைத் தமது விவசாய வாகனங்களால் தாக்கியவர்கள் சிலரும், போராட்டத்தில் ஈடுபட்ட சிலரும் கைதுசெய்யப்பட்டனர். வாகனத்தால் பொலீசாரைத் தாக்க முற்பட்டவர்களில் ஒருவன் 16 வயதானவன். போராட்டம் மேலும் வன்முறையாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை மாற்றத் தடுப்பு நடவடிக்கையான நைட்ரஜன் வெளியேற்றக் குறைப்பை நிறைவேற்றத் தாம் எடுத்த நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்கிறது நெதர்லந்து அரசு.

சாள்ஸ் ஜெ. போமன்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *