இடது சாரித் தலைவரது தலையில் மாவைக் கொட்டிய இளைஞர் கைது!பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் சம்பவம்.

பாரிஸில் இன்று நடைபெற்ற மக்கள்பேரணி ஒன்றில் மூத்த இடதுசாரி தலைவர் ஜீன்-லூக் மெலன்சோனின்(Jean-Luc Mélenchon) தலையில் கோதுமை மா கொட்டப்பட்டது. அவரை உடல் ரீதியாக அவமரியாதை செய்த இச் செயலைப் புரிந்தவர் எனக் கூறப்படுகின்ற இளைஞர் பொலீஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

வலதுசாரி தீவிரவாதத்துக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றுஇன்று பாரிஸ் நகரில் நடைபெற்றது. சமீபகாலமாக அதிகரித்து வருகின்ற தீவிர வலதுசாரிக் கருத்துகளுக்கு (far-right ideas) எதிர்ப்புத் தெரிவித்து ஏற்பாடு செய்யப்பட்ட அந்தப் பேரணிபாரிஸ் பிளாஸ் து கிளிச்சி(Place de Clichy) பகுதியில் ஆரம்பமாகியவேளை மூத்த தலைவரும் அதிபர் தேர்தல் வேட்பாளருமாகிய மெலன்சோன் அங்கு வருகை தந்திருந்தார்.

https://vetrinadai.com/news/anger-younger-macron/

அச்சமயத்திலேயே அவரதுதலையில் மா கொட்டப்பட்டது.தொழில் இல்லாத நிலையில் வாழும் 27 வயது இளைஞன் ஒருவரே ஆத்திரமடைந்தவராக மெலன்சோனின் முகத்தில் மாவை விசிறி எறிந்தார். அந்தஇளைஞர் தன்னை ஒரு தூய்மையான இடதுசாரி என்றும் “இறைமையாளன்”(sovereignist) என்றும் கூறிக்கொண்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தன்னைச் சுற்றி இருக்கின்ற இடதுசாரிகள் அனைவரையும் “பாஸிசவாதிகள்”என்று அவர் வர்ணித்தார். பிரான்ஸில் பொதுப் பேரணிகளில் முட்டை மற்றும் மா போன்றவற்றை வீசும் செயல் கைது செய்யப்பட்டுத் தண்டனை வழங்குகின்ற அளவிலான குற்றச் செயல் அல்ல.எனினும் பொலீஸார் அந்த இளைஞனைதடுத்துவைத்துள்ளனர்.

நாட்டின் அரசுத் தலைவர் மக்ரோன்இளைஞர் ஒருவரால் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் நடந்து சில தினங்களில்மற்றொரு அரசியல் பிரமுகர் அவமரியாதை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

“La France insoumise” என்ற அரசியல் கட்சியின் தலைவரும் நாடாளுமன்றஉறுப்பினருமாகிய ஜீன்-லூக் மெலன்சோன் மதிப்பு மிக்க மூத்த இடதுசாரியாவார். எனினும் சமீப நாட்களாக வெளியிடும் கருத்துகள் காரணமாக அவர் இடதுசாரிகள் மத்தியில் தனிமைப்பட்டு வருகின்றார்.

எதிர்வரும் அதிபர் தேர்தல் பிரசாரங்ளின் இறுதியில் ஒரு “முக்கிய சம்பவம்” அல்லது “ஒரு கொலை” நடக்கப்போவதைக் காண்பீர்கள் என்று அண்மையில் அவர் வெளியிட்ட கருத்து அரசியல் மட்டத்தில் பலத்த கண்டனங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி இருந் தது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *