எரிசக்தித் தயாரிப்பில் உறுதுணையாக இருக்கவேண்டிய பிரான்ஸ் அணு மின் ஆலைகள் தொல்லையாகியிருக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக எண்ணிக்கையில் அணுமின்சார உலைகளைக் கொண்ட நாடு பிரான்ஸ். எரிசக்தித் தயாரிப்புக்காக ரஷ்யாவில் தங்கியிருப்பதைக் குறைக்க உதவக்கூடியவை என்று அவை கருதப்பட்டன. ஆனால், நிலைமையோ எதிர்மாறானதாக இருக்கிறது. 56 பிரான்சின் அணுமின்சார உலைகளில் 30 சமீப காலத்தில் வெவ்வேறு பிரச்சினைகளால் பாவனை நிறுத்தப்பட்டிருக்கின்றன.
நிலைமையின் விளைவு வரவிருக்கும் குளிர்காலத்தில் பாவிப்பதற்காகத் தனது எரிவாயுவைச் சேமிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஜேர்மனி அந்த எரிவாயுவைப் பாவித்து அதிகப்படியான மின்சாரத்தைத் தயாரிக்கவேண்டிய நிலைக்கு உள்ளாக்கியிருக்கிறது. பிரான்சுக்கு மட்டுமன்றி சுவிஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் தேவைக்குமான மின்சாரத்தைத் தற்போது ஜேர்மனி தனது எரிவாயு மின்சார மையங்கள் மூலம் தயாரித்து ஏற்றுமதி செய்து உதவுகிறது. இத்தாலிக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக பிரான்ஸ் இருந்துவந்தது.
பிரான்சின் ஒரு பகுதி அணுமின்சார ஆலைகள் வயதில் பழையவையாகும். அவைகளை நிறுத்திவிட்டுத் தேவையான திருத்தங்களையும், புனருத்தாரணங்களையும் செய்து வருகிறது பிரான்ஸ். மேலும் சில அணுமின்சார நிலையங்களில் தயாரிப்பைக் குறைக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. காரணம் சமீப வாரங்களில் நாட்டில் பரவியிருக்கும் கடும் வெப்ப அலையாகும்.
சில அணுமின்சார உலைகளிலிருந்து வெளிவிடப்படும் பாவிக்கப்பட்ட நீரை நாட்டின் நீர்நிலைகளில் விடக்கூடாது என்று கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. காரணம் வெளிவிடப்படும் நீரின் வெப்பநிலை பிரான்ஸ் நீர் நிலைகளின் சூழலுக்குக் கேடு விளைவிக்கலாம் என்பதாகும்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சமீபத்தில் நடந்த தேசிய தின விழாவில் வெளியிட்ட செய்தி ஒன்று நாட்டு மக்கள் தமது மின்சாரப் பாவனையைக் குறைக்கவேண்டும் என்பதுமாகும். ஐரோப்பாவின் எரிசக்திப் பிரச்சினைக்கான தீர்வுகளில் ஒன்றாக இதுவரை கணிக்கப்பட்டு வந்த பிரான்ஸ் அணுமின்சார நிலையங்கள் இப்போது பாதகமான நிலைமையை உண்டாக்கிக்கியிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்