ஒரு வாரமாக ஈரானைத் தாக்கிவரும் வெள்ளப்பெருக்கால் இறந்தவர்கள் எண்ணிக்கை 80 ஐத் தாண்டியது.
வழக்கமாக வரட்சியான ஈரானின் தெற்குப் பிராந்தியம் கடந்த ஒரு வாரமாகக் கடும் மழையாலும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் தாக்கப்பட்டிருக்கிறது. சுமார் 80 பேர்இறந்து போயிருப்பதாகவும் 30 க்கும் அதிகமானோர் காணாமல் போயிருப்பதாகவும் நாட்டின் மீட்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.
தலைநகரமான தெஹ்ரானை உள்ளடக்கியிருக்கும் பிராந்தியத்திலேயே நிலைமை படு மோசமாகிப் பல இறப்புகள் உண்டாகியிருக்கின்றன. அப்பிராந்தியத்திலிருக்கும் மலைப்பகுதியில் கடுமையான மழையின் விளைவாக ஏற்பட்ட நிலைச்சரிவுகள் பலருடைய வீடுகளை அழித்துவிட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்டிருக்கும் விவசாய நிலங்களால் இழப்பு சுமார் 200 மில்லியன் டொலருக்கு அதிகமானது என்று விவசாய அமைச்சின் கணிப்பு குறிப்பிடுகிறது.
ஈரானின் தெற்கில் 2019 இல் ஏற்பட்ட கடும் மழை வெள்ளம் சுமார் 76 பேரின் உயிரைக் குடித்தது. அச்சமயத்தில் ஏற்பட்ட இழப்புகளின் பெறுமதி 2 பில்லியன் டொலரை விட அதிகமென்று கணிக்கப்பட்டது. வரட்சியான பகுதிகளில் திடீரென்று குறுகிய காலத்தில் இதுபோன்ற கடும் மழையும், வெள்ளமும் அழிவை ஏற்படுத்துவதன் காரணம் காலநிலை மாற்றமே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்